×

கருங்கல் புதையல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது

கருங்கல், ஜன.19: கருங்கல்  புதையல் விவகாரத்தில், கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக  இருந்து வந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குமரி மாவட்டம்  கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின் (26). ஜேசிபி  டிரைவரான இவர் திடீரென வீடு கட்டியதுடன், சொந்தமாக கார்களையும் வாங்கினார்.  ஜேசிபி தோண்ட சென்ற இடத்தில் தங்க புதையல் கிடைத்ததே ஜெர்லின்  வளர்ச்சிக்கு காரணம் என அந்த பகுதியில் வதந்தி பரவியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜெர்லினை ஒரு கும்பல் காரில் கடத்தி மிரட்டி  வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கினர்.

அந்த  கும்பலிடம் இருந்து தப்பி வந்த ஜெர்லின், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக  அப்போதைய குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக்கிடம் புகார் அளித்தார். புகாரின்  பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம்  தொடர்பாக கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற  ஜெயராஜன், கருங்கல் கப்பியறை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற ெஜய ஸ்டாலின்,  கடமலைக்குன்று பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், நாகர்கோவில் அருகே புத்தளம்  பகுதியை சேர்ந்த ராஜ அருள்சிங், அவரது சகோதரர் ராஜா அஸ்வின் மற்றும்  நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையை சேர்ந்த ஜெயன் ராபி, கிருஷ்ணகுமார்  மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் மீது கடத்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ்  கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் சுரேஷ்குமார், ஜெயன்  ராபி, கிருஷ்ணகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில்  சுரேஷ்குமார், நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில்  ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்  சுரேஷ்குமார், அளித்த வாக்குமூலத்தில் அப்போதைய கருங்கல் இன்ஸ்பெக்டராக  இருந்த பொன்தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜோண்ஸ் ஆகியோர்  உதவியுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து  இன்ஸ்பெக்டர் பொன்தேவி உள்பட 3 பேரும்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் மூவரும் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெகன் என்ற  ஜெயராஜன், ஸ்டாலின் என்ற ெஜய ஸ்டாலின் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே  இருந்து வந்தனர். இந்த நிலையில் ஜெகன் என்ற ஜெயராஜன் தனது நண்பரின்  பைக்கில் வந்தபோது, கருங்கல் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போலீசாருக்கு தெரியவந்தது.இதையடுத்து  போலீசார் மருத்துவமனைக்கு சென்று ஜெகன் என்ற ஜெயராஜனை கைது செய்தனர்.  இவர் மீது ஏற்கனவே ஆசிரியரை தாக்கிய வழக்கு, பத்திரிகையாளர்களை தாக்கிய  வழக்கு போன்றவை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : treasure hunting ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு