×

ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகளை பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும்

திருப்பூர், ஜன. 19:  ஆயத்த ஆடை ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்க பட்ஜெட்டில் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மத்திய நிதி அமைச்சருக்கு  ஏ.இ.பி.சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏ.இ.பி.சி. மத்திய நிதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய பட்ஜெட் வரும் பிப்.1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. உலக பின்னலாடை வர்த்தக சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் பல்வேறு தொழில் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். நமது போட்டி நாடுகள் பல்வேறு சலுகைகள் அறிவித்து ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது. ஒரு சில நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு, 3-5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல், அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கவேண்டும். ஏற்றுமதிக்கு பாதுகாப்பு அளிக்கும் காப்பீடுகளுக்கான பிரீமியம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் சுமை ஏற்படுகிறது. ஏற்றுமதி நிறுவனங்களின் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையை குறைக்க வேண்டும். புதிய தொழிலாளர் பணி அமர்த்தப்படும்போது, நிறுவனங்களுக்கு, தொழிலாளர் சம்பளத்தில் 30 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பெண் தொழிலாளர் புதிதாக பணி அமர்த்தும் நிறுவனங்களுக்கு, 60 சதவீதமாக வருமான வரி விலக்கு விகிதத்தை உயர்த்த வேண்டும். நிறுவனங்களில் புதிய முதலீடுகளுக்கு 15 சதவீதம் வருமான வரி விலக்கு வழங்கும் காலத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இதன் மூலம், ஆயத்த ஆடை துறையில் புதிய முதலீடுகள் வருகை அதிகரிக்கும். ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து ஜாப் ஒர்க் துறை, மூலப்பொருட்களுக்கும், ஐந்து சதவீதம் என்கிற ஒரே சீரான வரி விதிப்பு முறையை பின்பற்ற வேண்டும். இ.பி.சி. திட்டத்தில், ஐ.ஜி.எஸ்.டி. வரி விலக்குடன் ஆடை தயாரிப்பு பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். ஏற்றுமதி ஆடை மதிப்பில் ஐந்து சதவீதத்துக்கு நிகரான மதிப்பில், ஆடை உற்பத்தி மூலப்பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்யும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : garment exporters ,
× RELATED ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 18...