×

பொங்கல் கபடி போட்டியில் மோதல் கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர் பலி

கோவை, ஜன.19: கோவையில் பொங்கல் விழா கபடி போட்டியில் நடந்த மோதலில் கத்திக்குத்தில் காயமடைந்த வாலிபர் பலியானார். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை புலியகுளம் அருகே அம்மன்குளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நவீன்குமார் (30). கபடி வீரர். இவரும், அவருடைய நண்பர் திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியை சேர்ந்த லோகேஷ் (34) என்பவரும் அம்மன்குளம் பகுதியில் பொங்கலையொட்டி நடந்த கபடி போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் நவீன்குமாரின் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 வீரர்களை நவீன்குமார் களமிறக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக பரிசளிப்பு விழாவின்போது மற்றொரு அணியை சேர்ந்த வடவள்ளி ராஜீவ்காந்தி நகர் விஜயகுமார் என்கிற கொக்கு விஜயகுமார் (23), அவருடைய சகோதரர் கண்ணன் (20) மற்றும் அவர்களது நண்பர் ஜப்பான்(எ)ஹரிஹரன்(23) ஆகியோருக்கும், நவீன்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். அப்போது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீன்குமாரை குத்தினார். தடுக்க முயன்ற லோகேசுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.கத்திக்குத்தில் நவீன்குமாருக்கு வயிறு, இடுப்பு உள்ளிட்ட 7 இடங்களிலும், லோகேஷுக்கு ஒரு இடத்திலும் காயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய கண்ணன் நேற்று மாலை கைதானார். ஹரிஹரனை தேடி வருகின்றனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Pongal Kabaddi ,match clash knife ,
× RELATED பொங்கலை முன்னிட்டு நெல்லை டவுனில் கபடி போட்டி