×

பொங்கல் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோவை, ஜன.19: பொங்கல் விடுமுறையையொட்டி கோவை குற்றால அருவியில் குளிக்க பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடந்த நான்கு நாட்களில் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக வனத்துறைக்கு ரூ.8.40 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. கோவை குற்றாலம் அருவி சாடிவயல் அருகே உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளித்து மகிழ கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் அதிக அளவில் குவிவது வழக்கம். கடந்த ஆண்டு வறட்சியால் நீர்வரத்து இன்மை, கன மழையால் காட்டாற்று வெள்ளம் போன்ற காரணங்களால் வருடத்தின் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் கோவை குற்றாலம் மூடப்பட்டே இருந்தது.

இந்நிலையில் பொங்கல் விடுமுறையையொட்டி, கோவை குற்றால அருவியில் குளிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிக்கு செல்ல நுழைவு கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், கேமரா பயன்படுத்தும் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் வனத்துறையால் வசூலிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக ரூ.8.40 லட்சம் வனத்துறையினருக்கு வருவாய் வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக காணும் பொங்கல் தினமான 17ம் தேதி அன்று ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 530 வசூலாகி உள்ளது. இதேபோல மாட்டு பொங்கல் தினமான 16ம் தேதி அன்று ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 510 வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 4 நாட்களில் பெரியவர், குழந்தைகள் உட்பட 16,340 பேர் கோவை குற்றால அருவிக்கு வருகை புரிந்துள்ளனர். வார விடுமுறை தினம் என்பதால் இன்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போளுவாம்பட்டி வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் அதிக ஆழமுள்ள, ஆபத்தான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.

Tags : Pongal Holidays ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...