×

கொரனோ வைரஸ் பாதிப்பு எதிரொலி வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்காணிப்பு

கோவை, ஜன.19: சீனாவில் உள்ள ஊகான் நகரத்தில் கொரனோ வைரஸ் என்ற ஒருவகை வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. சாதாரண காய்ச்சலுக்கு உண்டான அறிகுறிகளுடன் வரும் இந்த நோய் தொற்றால் சுவாச கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுவரை குறிப்பிட்ட அந்த நகரத்தில்  இவ்வகை நோய் தாக்குதலுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். சுமார் 41 பேர் கடும் நோய் தொற்று பாதிப்புடன் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். பன்றிக் காய்ச்சல், என்1 எச்1 போன்று புதிதாக  கண்டறியப்பட்டுள்ள இவ்வகை வைரஸ் தொற்று நோய் பரவுதலை முன்கூட்டியே  தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார  நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் சீனா செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு மருத்துவ ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானநிலையங்களில் மருத்துவ சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கோவை விமானநிலையத்தில் தமிழ்நாடு சுகாதார துறை சார்பில் மருத்துவ கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு  சுகாதார ஆய்வாளர் அடங்கிய இந்த குழு சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘‘சீனாவில் ஊகான் நகரத்தில் கொரனோ வைரஸ்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வகை வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் குறிப்பாக  சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் வகையில் விமான நிலையங்களில்  சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும்  பயணிகளுக்கு சளி, காய்ச்சல், சுவாசத் தொற்று போன்ற அறிகுறிகள் காணப்பட்டால்  அவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைத்து கண்காணிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களின் நோய் பாதிப்புகளின் முந்தைய நிலை  குறித்தும் ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து கண்காணித்து நோய் பரவுதலின்  சாத்தியக்கூறுகள், நோயின் தன்மை குறித்து ஆய்வு செய்ய  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள  சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வைரஸ் நேரடியாக நுரையீரல்  பகுதியை பாதித்து சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளை  ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Coronavirus Vulnerability Echoes Monitor Travelers ,Overseas ,
× RELATED ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு...