×

அரசு இளநிலை உதவியாளர்களுக்கான பயிற்சி ஜன.21ம் தேதி துவக்கம்

ஈரோடு, ஜன.19: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டுக்கான இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கான சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சி வரும் 21ம் தேதி முதல் மார்ச் மாதம் 7ம் தேதி வரை 41 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில், 150 பேர் (இருபாலர்) பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி கூட்டம் வரும் 21ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ளும் இளநிலை உதவியாளர்கள் பயிற்சி துவங்கும் முந்தைய நாளான 20ம் தேதி, அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் பணி விடுவிப்பு சான்று பெற்று வர வேண்டும். பயிற்சிக்கு வந்த பின் எவ்வித விடுப்பும் வழங்கப்படாது. பணியில் இருந்து விடுவித்த பின்னர் பயிற்சியில் பங்கேற்காமல் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சிக்கு வரும்போது, அலுவலர்கள் ஒப்பந்த பத்திரம், அடையாள அட்டை சான்றுடன் கூடிய அலுவலகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆணை அசல் சான்றிதழ், பணி வரன்முறை ஆணை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2 உடன் எடுத்து வரவேண்டும்.

குழந்தையுடன் பயிற்சியில் கலந்து கொள்ள வரும் பெண்கள், அவருடன் ஒரு உதவியாளர் பயிற்சி நிலையத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். 4 மாத கர்ப்பிணி பெண்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் மருத்துவரிடம் தடையின்மை சான்று பெற்று வர வேண்டும். மேலும், பயிற்சி காலம் முழுவதும் பிறப்பு, இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு மட்டும் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். பயிற்சி காலத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணை, பிற அலுவலக பணிகள் ஆகியவற்றிற்கு பயிற்சியாளர் செல்ல அனுமதி இல்லை. பெண் அலுவலர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளும் போது விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்கள் கொண்டு வரக்கூடாது. பயிற்சியாளர்கள் சேர்க்கை நாளில் காலை 9 மணிக்கு ஆஜராக வேண்டும். தாமதமாக பயிற்சிக்கு வந்தால் மாற்று பணியாளர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government Junior Assistants ,
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை