×

விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் 3 பேர் பலி: போலீஸ் விசாரணை

விழுப்புரம், ஜன. 19: விழுப்புரம் அடுத்த கேவிஆர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சூரியகுமார் (48). இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் வழக்கமாக உடற்பயிற்சிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் செல்வது வழக்கம். நேற்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 8.30 மணி அளவில் சென்னை பேருந்துகள் நிறுத்தம் அருகிலுள்ள கழிவறைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் வரை நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக சென்னை பேருந்து நிறுத்தத்தில் அதிவேகமாக திரும்பியபோது, சூரியகுமார் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலைய போலீஸ் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் சூரியகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சூரியகுமார் இறந்தார். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மனநிலை பாதித்தவர் தற்கொலை:  விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (39). இவருக்கு கீதா (37) என்ற பெண்ணுடன் 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். இவரை  அவரது நண்பர்கள், உறவினர்கள் என யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால், மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கார்த்திகேயன் கடந்த 16-ம் தேதியன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத முதியவர் சாவு:  விழுப்புரம் அடுத்து சாமிபேட்டை கிராமம் அரசு பள்ளி பின்புறத்தில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு ஆனாங்கூர் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்ததில், கடந்த ஒரு மாதமாக அவர் கூடை பின்னும் தொழில் செய்து வந்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு தான் சாமி பேட்டை கிராமத்துக்கு வந்தார். அங்கு கிராம மக்கள் கொடுக்கும் உணவை உண்டு விட்டு அங்கேயே இருந்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து விழுப்புரம் போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,police investigation ,
× RELATED பாதுகாப்பற்ற முறையில் கிடக்கும்...