×

ஆற்று பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கடலூர், ஜன. 19: கடலூர் மாவட்டத்தில் கடலூர், முள்ளிகிராம்பட்டு, பண்ருட்டி, புவனகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று ஆற்று திருவிழா நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் ஆற்றுத் திருவிழா நடைபெறும் இடங்களில் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலூர் தென்பெண்ணையாற்றின் கரையில் நடைபெறும் ஆற்றுத் திருவிழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் தென்பெண்ணையாற்றில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு பள்ளங்களில் மண் நிரப்பப்பட்டு சமன்படுத்தப்பட்டது. மேலும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக அங்கு புறக்காவல் நிலையமும் உயர் மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. எஸ்பி அபிநவ் உத்தரவின்பேரில் கடலூர் டிஎஸ்பி சாந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஊர்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் போலீசாருடன் இணைந்து பணியாற்றுகின்றனர். திருவிழாவை முன்னிட்டு ரங்கராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாட்டு வண்டி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கோயில் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு, கொண்டு வரப்பட உள்ளது. பண்ருட்டி கெடிலம் ஆற்றில் ஆற்று திருவிழா நடைபெறும் இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சி கொட்டிய குப்பை கழிவுகளால் ஆற்றின் பகுதி முழுவதும் குப்பை மேடாக மாறியது. திருவிழாவை முன்னிட்டு நகராட்சி சார்பில் குப்பைகள் அகற்றப்பட்டு மண் கொட்டி சீரமைக்கப்பட்டுள்ளது. தீர்த்தவாரியில் பங்கேற்க பண்ருட்டி சோமநாதர்சாமி, மாளிகம்பட்டு செல்லமுத்துமாரியம்மன், திருவதிகை முத்துமாரியம்மன், மாரியம்மன், விழமங்கலம் மாரியம்மன், படைவீட்டம்மன் கோயில் உள்ளிட்ட 40 கிராமங்களில் இருந்து உற்சவர் சிலைகள் ஆற்று தீர்த்தவாரியில் பங்கேற்க உள்ளன. ஆற்று திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Tags : river areas ,
× RELATED எண்ணூரில் முகத்துவார ஆற்று பகுதிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு