×

மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

நாமக்கல்,  ஜன.19: நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை துவங்கி, 8 மணி வரையிலும் கடும்  பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு  ஆண்டுகளாக போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டது. நீர்நிலைகள் வறண்டு போனது.  இந்த ஆண்டு மாவட்டம் முழுவதுமாக நல்ல மழை பெய்துள்ளது. காவிரியில் டெல்டா  பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நீர்நிலைகள் அனைத்தும்  நிரம்பி காணப்படுகிறது. விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடி செய்து, தற்போது  அறுவடை பணிகளை துவக்கியுள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில்  கடந்த சில வாரங்களாக காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.  அதிகாலை கடும் குளிர்காற்று வீசுகிறது. தொடர்ந்து காலை 8 மணி வரை   பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே  வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏராளமானோர்  குளிர் காய்ச்சல், தொண்டை வலி உளளிட்ட பாதிப்புகளால் அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  தேசிய  நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு  செல்கின்றன. லாரி டிரைவர்கள் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி விறகு மூலம் தீ  மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். கொல்லிமலை மலைப்பாதை மற்றும் பல  சாலைகளில் காலை நேரத்தில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இருசக்கர  வாகனங்களில் செல்பவர்கள் ஸ்வெட்டர், ஜெர்க்கின் அணிந்தபடி செல்கின்றனர். பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிரை அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...