×

வலங்கைமான் அருகே உடைந்த கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் சீரமைப்பு பணி மும்முரம்

வலங்கைமான், ஜன. 19: வலங்கைமான் அடுத்த விருப்பாட்சிபுரம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு தினகரன் செய்தி எதிரொலியாக சரிசெய்யும் பணி நடைபெற்று வருகின்றது. வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன்பெறும் விதமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக இத்திட்டத்தில் வேதாரண்யம் பகுதிக்கு கும்பகோணம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பாபநாசம்-வலங்கைமான் மற்றும் வலங்கைமான் - மன்னார்குடி சாலைவழியாக சாலையின் மையப்பரப்பில் இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தி தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது. குடவாசல்- பாபநாசம் சாலையில் விருப்பாட்சிபுரம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக தண்ணீர் கால்வாய்போல் ஓடுகிறது. மேலும் குளம்போல் தேங்கி கழிவுநீர் குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக குடிதண்ணீர் வீணாவதோடு தொற்று நோயும் பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே மேலும் காலதாமதம் செய்யாமல் குடிதண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து நேற்று குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஈடுபட்டனர்.

Tags : sewage line ,Valangaiman ,
× RELATED நீர் நிலைகளில் போதிய தண்ணீர் இல்லை...