×

ஊரக உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் அதிமுக பிரமுகர்களை தாக்கிய தமாகா நிர்வாகி உள்பட 9 பேர் கைது

திருவாரூர், ஜன. 19: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு செல்வி, சூரியலட்சுமி, சரஸ்வதி மற்றும் பானுமதி ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் அதிமுக ஆதரவு கொண்ட வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடைபெற்றதாக கூறி சுயேட்சைவேட்பாளரும், தமாகாவின் மாவட்ட துணை தலைவருமான செல்வதுரை என்பவர் மனைவி சூரியலட்சுமி தரப்பில் கடந்த 6ம் தேதி தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசின் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தனர். ஊராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும், அப்போது இது குறித்து ஆவணங்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் தியாகராஜன் (50) மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர் ஏசுராஜ் உட்பட 11 பேர் வண்டாம்பாளையம் படுகை தெருவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு பைக்கில் சாமி கும்பிட சென்றனர்.

தேர்தல் முன் விரோதம் காரணமாக சுயேட்சை வேட்பாளர் சூரியலட்சுமியின் கணவரான தமாகாவை சேர்ந்த செல்வதுரை மற்றும் சிலர் சேர்ந்து வழியை மறைத்து தியாகராஜன் மற்றும் ஏசுராஜ் உட்பட அனைவரையும் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் சதீஷ்குமார், பத்மநாபன், சரவணன், செல்வமணி மற்றும் ராஜகோபால் மனைவி வளர்மதி ஆகிய 4 பேருக்கும் மண்டை உடைந்தது .தியாகராஜன், ஏசுராஜ் உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தியாகராஜன் தரப்பிலிருந்து செல்வமணி அளித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வதுரை (50) மற்றும் அவரது ஆட்கள் 12 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இதில் செல்வதுரை உட்பட 9 பேரை கைது செய்தனர்.இதேபோல் செல்வதுரை தரப்பிலிருந்து கண்ணன் என்பவர் தங்களை ஜாதியை சொல்லி திட்டியதாக கொடுத்த புகாரின் பேரில் தியாகராஜன் தரப்பை சேர்ந்த மணிவேல் (32) மற்றும் கணேஷ்குமார் (35) இருவரையும் கைது செய்தனர்.

Tags : executive ,Tamaka ,UDF ,
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்