விருதுநகர் ரயில்நிலையத்தில் தட்கல் முன்பதிவுக்காக ஆக்கிரமிக்கும் தரகர்கள்

* 23 மணி நேரத்துக்கு முன்பே இடம் பிடிப்பு

* சாமானியர்களுக்கு கனவாகும் தட்கல் பதிவு

* ரயில்வே அதிகாரிகள், போலீசார் ‘கப்சிப்’

விருதுநகர், ஜன. 19:  விருதுநகர் ரயில் நிலையத்தில் தட்கல் முன்பதிவிற்காக 23 மணி நேரத்திற்கு முன்பே இருக்கைகளில் அட்டைகளை எழுதி கட்டி வைத்து தரகர்கள் கூட்டம் இடம்பிடிப்பதால், சாமானிய மக்களுக்கு ரயிலில் முன்பதிவு டிக்கெட் கனவாகி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், போலீசாரும் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். விருதுநகரில் உள்ள ரயில் நிலையம் வழியாக தினசரி 60க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் சென்று வருகின்றன. இந்த ரயில்களில் இடம் கிடைப்பது அரிதாகி வருகிறது. குறிப்பாக பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரயில்களில் டிக்கட் கிடைப்பது என்பது கனவாகி வருகிறது.

ஒவ்வொரு பண்டிகைக்கும் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துவிடுகின்றன. மேலும், அனைத்து விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு கிழமைகளில் ரயில்களில் இடம் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. தட்கல் முறை பதிவானது ஒரு நாட்கள் முன்பாக பதிவு செய்யப்படுகிறது.

இந்த முறையிலும் காலை 11 மணிக்கு பதிவு துவங்கி சில நிமிடங்களில் முடிந்து விடுவதால் போட்டிகள் அதிகமாகி வருகின்றன. விருதுநகர் ரயில் நிலையத்தில் இன்று (ஜன.19) தட்கல் பதிவிற்காக நேற்று (ஜன.18) காலை 12 மணிக்கே அதாவது 23 மணி நேரத்திற்கு முன்பே இருக்கைகளில் பேப்பர் போர்டுகளில் பெயர் எழுதி வைத்து ஆக்கிரமித்தனர்.

இந்த நடைமுறையை தரகர்கள், அதிகார வர்க்கத்தினர் செய்வதால் சமானிய மக்களால் எதுவும் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இந்த இருக்கை ஆக்கிரமிப்பு நடைமுறையை ரயில்வே அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்த வகையில் இடம்பிடித்து டிக்கெட் பெற்றுத்தர ரூ.200 வரை பணம் பெறப்படுகிறது.மேலும் தட்கல் பதிவிற்கு சீட் பிடிக்கும் முறையில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் முன்பதிவாளர்கள், புரோக்கர்களுக்கு இடையே ஒரு விதமான ‘புரிதல்’ இருப்பதாக சமானிய மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, ரயில்வே உயரதிகாரிகள் தட்கல் முன்பதிவில் முன்கூட்டி துண்டுபோடுதல், போர்டு எழுதி வைத்தல், கற்கள், டப்பா வைத்தல் என பலவித முறைகளில் இடம் பிடிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: