பரமக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டரை தாக்கியதாக 4 பேர் கைது

பரமக்குடி, ஐன. 19: பரமக்குடி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மருத்துவம் பார்ப்பதில் தாமதம் ஏற்பட்டதாக, பணியிலிருந்த டாக்டரை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரமக்குடி   நகரைச் சுற்றிலும் அதிகமான கிராமங்கள் உள்ளதால் எப்பொழுதும் பல்வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு போதுமான டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் காலை நேரங்களில் கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நயினார்கோவில் அருகே உள்ள தாளையடிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, தனது தாயார் பஞ்சவர்ணத்திற்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
பணியில் இருந்த பெண் டாக்டர், பஞ்சவர்ணத்தை பரிசோதித்து ஸ்கேன் எடுத்து வருமாறு அனுப்பியுள்ளார்.

ஸ்கேன் எடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பஞ்சவர்ணத்தின் உடல்நிலை மேலும் மோசமானதால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது பணியிலிருந்த டாக்டர் ஜெகநாதன் பஞ்சவர்ணத்தை சோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டார். காலையில், கொண்டு வந்தவுடன் முறையான சிகிச்சை அளிக்கவில்லை அதனால் பஞ்சவர்ணத்தின் உடல்நிலை மோசமானதாக டாக்டர் ஜெகநாதன், மின்உதவியாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் செவிலியர்களிடம் பஞ்சவர்ணத்தின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டாக்டர் ஜெகநாதன், மின்உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை பஞ்சவர்ணத்தின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து டாக்டர் ஜெகநாதன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தாளையடிகோட்டை ஈஸ்வரமூர்த்தி, காட்டுராஜா, முருகேசன், அருணகிரி மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : doctor ,Paramakudi Government Hospital ,
× RELATED டியர் டாக்டர்