×

பேரம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 11 உற்சவர்கள் பாரிவேட்டை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

திருவள்ளூர், ஜன.19: பேரம்பாக்கத்தில் காணும் பொங்கலன்று  நடந்த பாரி வேட்டை திருவிழாவில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த 11 உற்சவர்கள் ஒரே
இடத்தில் கூடி காட்சியளித்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும்பொங்கலன்று கூவம் ஆற்றுங்கரையோரம் பாரி வேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பாரி வேட்டை திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது.இதில், பேரம்பாக்கத்தில் இருந்து பாலமுருகன், காசி விஸ்வநாதர், சோளீஸ்வரர் மற்றும் களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் கிராமத்தில் இருந்து வேங்கட பெருமாள் ஆகிய உற்சவர்கள் வந்தனர்.

தொடர்ந்து சிவபுரம் கிராமத்தில் இருந்து குறுந்த விநாயகர், மாரிமங்கலம் கிராமத்தில் இருந்து வள்ளலார், மாரியம்மன், பழைய கேசாவரம், பட்டுமுடையார்குப்பம் கிராமங்களில் இருந்து சிவன் என மொத்தம் 11 உற்சவர்கள் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மைதானத்தில் ஒரே இடத்தில் கூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இக்காட்சியை பேரம்பாக்கம், நரசிங்கபுரம், கடம்பத்தூர், மப்பேடு, மாரிமங்கலம், தக்கோலம் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து கண்டு களித்தனர். இரவு, 9 மணிக்கு வாண வேடிக்கை நடந்ததும், அனைத்து உற்சவர்களும் பஸ் நிலையத்தில் ஒன்றாக கூடினர்.அங்கு கிராம பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அந்தந்த கிராமங்களில் உற்சவர்களின் திருவீதி உலா நடந்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக எஸ்.பி., அரவிந்தன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : devotees ,festival ,Barivate ,festival festival ,
× RELATED தாய்லாந்தில் நடைபெற்ற பச்சை குத்தும் திருவிழா!!