×

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி: வாலிபர் கைது

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ₹27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சேத்துபட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசிம்மன் (46). இவர், திருமணம் செய்துகொள்ள பெண் தேவை என்று தனியார் வெப்சைட் ஒன்றில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து ஐதராபாத்தை சேர்ந்த உமாராணி (42) என்பவர், வெப்சைட்டில் கொடுத்திருந்த முகவரி மற்றும் செல்போன் எண்ணை வைத்து ராஜசிம்மனை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, இருவரும் தங்களது விவரங்களை பகிர்ந்து கொண்டு, திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியதால் நெருக்கம் ஏற்பட்டது. ராஜசிம்மன், தனக்கு செலவுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் உமாராணியிடம் கேட்டுள்ளார்.

 அவரும், திருமணம் செய்யப்போகும் நபர்தானே என, அவர் கேட்கும் பணத்தை அவ்வப்போது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். மேலும், சொந்தமாக தொழில் தொடங்கப்போவதாக கூறி, அந்த பெண்ணிடம் இருந்து ₹27 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.  ஒரு கட்டத்தில் உமாராணி என்னை எப்போது திருமணம் செய்துகாள்ள போகிறீர்கள் என்று ராஜசிம்மனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறி திருமண பேச்சை தவிர்த்துள்ளார். இந்நிலையில், ராஜசிம்மன் செல்போனுக்கு அந்த பெண்  தொடர்புகொண்டபோது, பல நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வெப்சைட்டில் பதிவு செய்திருந்த முகவரியை வைத்து சென்னைக்கு வந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் வேறுவழியின்றி ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில்,  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராஜசிம்மன் திருச்சியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருச்சிக்கு சென்று ராஜசிம்மனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதேபோல் ராஜசிம்மன் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்றும் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...