×

வேலூர், அணைக்கட்டு தாலுகாக்களில் மாடு விடும் விழாவின்போது மேளதாளம் அடிக்க தடை

வேலூர், ஜன.14: வேலூர், அணைக்கட்டு தாலுகாக்களில் 7 இடங்களில் நடைபெறும் மாடு விடும் விழா குறித்து அனைத்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேள தாளம் அடிக்க விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஓ தெரிவித்தார். பொங்கல் பண்டிகையொட்டி வேலூர் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை 56 இடங்களில் மாடு விடும் விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை வேலூர், அணைக்கட்டு தாலுகாக்களில் 7 இடங்களில் மாடு விடும் விழா நடத்துவது குறித்து அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ கணேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், மாடு விடும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு திறந்த வெளி கிணறு இருக்கக் கூடாது. தீயணைப்பு வாகனம் நிறுத்த விழாக்குழுவினர் 3 ஆயிரம் செலுத்த வேண்டும். கால்நடைக்கு என தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் தயாராக இருக்க வேண்டும். மாடுகளை துன்புறுத்தக்கூடாது. மனிதர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தனியாக ஒரு வீடு அல்லது அறை அமைக்க வேண்டும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மாடுகளை அழைத்து வரும்போது மேளதாளம் அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாடு விடும் விழா நடைபெறும் இடத்தில் தடுப்பு வேலிகளை உறுதியான முறையில் அமைக்க வேண்டும். அன்றைய தினத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். காவலர்களுக்கு 2 உயர கோபுரம் அமைக்க வேண்டும். வேலி அமைக்க வேண்டும். மாடு விடும் விழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் விழா குழு தலைவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில், தாசில்தார்கள் சரவணமுத்து, பாலமுருகன், டிஎஸ்பிக்கள் பாலகிருஷ்ணன், துரைபாண்டி, அரசு அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Vellore ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...