×

வேலூர் பழைய பாலாறு பாலத்திற்கு மாற்றாக 50 கோடியில் புதிய பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார்

வேலூர், ஜன.14: வேலூர் பழைய பாலாறு பாலத்திற்கு பதிலாக 50 கோடியில் புதிய பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு வேலூர் பழைய பாலாறு பாலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் காட்பாடி, குடியாத்தம், திருவலம், ராணிப்பேட்டை, வாலாஜா, பொன்னை ஆகிய பகுதிகளில் இருந்து வேலூர் நோக்கி வரும் பஸ்கள் இந்த பாலத்தைத்தான் கடந்து வர வேண்டும். அதேபோல் அப்பகுதிகளில் இருந்து வேலூர் நோக்கி வரும் சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என்று இந்த பாலத்தைதான் பயன்படுத்தி வருகின்றன. இதனால் 24 மணிநேரமும் வாகனங்கள் இயங்கும் பாலமாக உள்ளது. இந்த பாலம் இதற்கு முன்னதாக இருவழிப்பாலமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலானதால் இந்த பாலத்தின் தடுப்புசுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழுந்தது. மின்விளக்குகளும் காற்றில் விழுந்தது. அதேபோல் பாலத்தின் அடிப்பகுதியிலும் மழைவெள்ளம் ஏற்பட்டபோது சிமென்ட் கான்கிரீட்டுகள் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் இப்பாலம் சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போதுள்ள பழைய பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது ₹50 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, தற்போதுள்ள பாலம் எத்தனை ஆண்டுகள் பயன்படுத்த முடியும் என்பதையும் ஆய்வு செய்து, உடனடியாக புதியபாலத்திற்காக தயார் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் புதிய பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன் பணிகள் தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ெதரிவித்தனர்.

Tags : bridge ,Vellore ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...