×

மெத்தனமாக செயல்படுவதாக கூறி அதிகாரிகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி, ஜன.14:  மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் ஆளும்கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து அதிமுக.வினர் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்பட அடிப்படை தேவைகளை அதிகாரிகள் பூர்த்தி செய்யாமல் மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து அதிமுகவினர் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நகர்மன்ற முன்னாள் தலைவரும், நகர செயலாளருமான மெய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் சின்னத்துரை, வழக்கறிஞர் ராசு, நகர இளைஞரணி செயலாளர் இயல்தாகூர் உள்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தாசில்தார் பாலாஜி, நகராட்சி பொறியாளர் ரெங்கராஜூ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதுகுறித்து நகரசெயலாளர் மெய்யப்பன் கூறுகையில், பாதாளசாக்கடை திட்ட பணிக்கு ரூ.120 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. ஒரு பகுதியில் பணியை முடித்து விட்டு அடுத்த பகுதிக்கு செல்ல வேண்டும். ஆனால் ஒப்பந்தகாரர்கள் அதுபோன்று செய்யாததால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. பல்வேறு பகுதிகளில் நடக்க கூட இடம் இல்லை. சாலை அமைக்க 50 கோடி ஒதுக்கியும் பல்வேறு பகுதிகளில் சாலை போடவில்லை. மாவட்ட செயலாளர், அமைச்சர் ஆகியோர் நிதிகளை உடனே ஒதுக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் முறையாக செயல்படாததால் மக்கள் பிரச்சனை அதிகஅளவில் உள்ளது. தெருவிளக்குகள் எரியவில்லை. இதற்கு என தனி குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். பல பகுதிகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. மக்கள் பிரச்சனையை அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் சரிசெய்யாமல் உள்ளனர். ஆளும்கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து ஆர்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.


Tags : AIADMK ,Karaikudi ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...