×

தைப்பொங்கலையொட்டி சிவகாசியில் குவியுது செங்கரும்பு கட்டு ரூ.500 முதல் 600 வரை விற்பனை

சிவகாசி, ஜன. 14: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகாசியில் கரும்பு கட்டுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது.தமிழகர் திருநாளாம் பொங்கல் திருநாள், தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்கள் வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, கதிரவனுக்கு படைப்பர். பொங்கல் பண்டிகையில் கரும்பும், மஞ்சள்கொத்தும் முக்கிய இடம் பிடிக்கும்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பை மிகவும் விரும்புவர்.

தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் திருநாள் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள்கொத்து விற்பனை சூடுபிடித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதிகளிலிருந்து கரும்புகள் விற்பனைக்காக வந்துள்ளன. சிவகாசியில் சிவன் கோயில் சந்து, மார்க்கெட் பகுதி, பைபாஸ் பகுதி, பஸ் ஸ்டாண்டு, மாரியம்மன்கோயில் பகுதி, திருத்தங்கல் உட்பட 50க்கும்மேற்பட்ட இடங்களில் கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. கரும்புகளை பொதுமக்கள் நேற்று முதலே மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.500ல் முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40 முதல் 50வரை விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்டங்களில் இருந்து வந்துள்ள கரும்புகள் நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதே போன்று பனங்கிழங்கு விற்பனையும்
சூடுபிடித்துள்ளது. திருவில்லிபுத்தூர் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள பனங்கிழங்குள் 15 பனங்கிழக்கு கொண்ட ஒரு கட்டுரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளதால் நகரின் முக்கியச் சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Tags : Sivakasi ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை