×

நன்னடத்தை உறுதிமொழியை மீறிய வாலிபருக்கு 313 நாட்கள் சிறை

பட்டாபிராம், ஜன. 14; நன்னடத்தை உறுதிமொழியை மீறியதற்காக பட்டாபிராமை  சேர்ந்த வாலிபருக்கு 313 நாட்கள் சிறை தண்டனை விதித்து அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார். ஆவடியை அடுத்த பட்டாபிராம், அணைக்கட்டுசேரி, ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (25). வெல்டர். இவர், மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி பட்டாபிராம் போலீசார், குற்ற வழக்குகளில் ஈடுபடாமல் இருக்க அறிவழகனை அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் முன் ஆஜர்படுத்தினர். அப்போது அவர், அறிவழகனிடம் ஒரு ஆண்டிற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாமல் இருக்க நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரம் எழுதி வாங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி நள்ளிரவு அணைக்கட்டுசேரியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க விதவையின் வீட்டுக்குள் அறிவழகன் நுழைந்துள்ளார். பின்னர், அவரை, அறிவழகன் மானபங்கம் செய்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் அறிவழகன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவழகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, நன்னடத்தை உறுதிமொழியை மீறியதற்காக அறிவழகனை பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் நேற்று புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்து வந்தார். பின்னர், அவரை போலீசார் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் ஆஜர்படுத்தினர். இதன் பிறகு, அவர் நன்னடத்தை விதியை மீறியதாக அறிவழகனுக்கு ஒரு ஆண்டில் தவறு செய்யாத நாட்களை கழித்து மீதி உள்ள 313 நாட்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதன் பிறகு,  போலீசார் அவரை புழல் சிறையில் மீண்டும் நேற்று மாலை  அடைத்தனர்.

Tags : jail ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!