×

ஊத்துக்கோட்டை அரசு பள்ளிச்சுற்றுச்சுவரை உடைத்த மர்ம நபர்கள்: சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஜன. 14:  ஊத்துக்கோட்டை பேரூராட்சியில்  அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளி உள்ளது. 1954ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில், தற்போது தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, போந்தவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், பிளேஸ்பாளையம் என 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து  6 முதல் 12ம் வகுப்பு வரை 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதிய வகுப்பறைகள் இல்லாதபோது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1958-59ம் ஆண்டு இன்பக்கனவு, சுமைதாங்கி என்ற 2 நாடகங்களை நடத்தி அதன் மூலம் வந்த வருமானத்தில் 4 வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார் என்ற பெருமையும் இப்பள்ளிக்கு உண்டு, இப்பள்ளியில் பழைய வகுப்பறைகள் அகற்றப்பட்டு தற்போது  புதிதாக 40 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

இப்பள்ளியை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவர் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த சுற்றுச்சுவரை  பள்ளி விடுமுறை நாட்களில் மர்ம நபர்கள் சிலர் உடைத்து விட்டனர். இதனால், இதை பயன்படுத்தி இப்பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்புகளை ‘கட்’ அடித்து விட்டு வெளியே சென்று விடுகிறார்கள். எனவே, சேதமடைந்த பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள காம்பவுண்டு சுவரை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்புகளை புறக்கணித்து விட்டு செல்கிறார்கள்.
மேலும், தாமதமாக வரும் மாணவர்களும் சேதமடைந்த காம்பவுண்டு வழியாகத்தான் பள்ளிக்கு செல்கிறார்கள்.

பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான  கழிவறைகளையும் சேதப்படுத்தி விட்டனர். எனவே, மர்ம நபர்கள்  உடைத்து சேதப்படுத்திய  காம்பவுண்டு சுவற்றை முன்னாள் மாணவர்களாவது அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகமாவது விரைந்து சீரமைக்க வேண்டும்’ என கூறினர்.

Tags : Uthukkottai ,activists ,
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...