×

புவனகிரி வட்டாரத்தில் நெல்லில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுரை


சேத்தியாத்தோப்பு, ஜன. 14:   புவனகிரி வட்டாரத்தில் நெல்லில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் தற்போதை பருவகால சூழ்நிலையால் புவனகிரி அருகே மேலமூங்கிலடி, கீழமூங்கிலடி, சொக்கநாதன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகையான் பூச்சித்தாக்குதல் தென்பட்டு வருகிறது. புகையான் பூச்சி தாக்குதல் பாதிக்கப்பட்ட வயல்களில் தண்ணீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். பூச்சித்தாக்குதல் ஏற்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து தீய்ந்த மாதிரி காட்சியளிக்கும். முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாக காணப்படும். இதனை கட்டுப்படுத்த நெல்பயிருக்கு யூரியா உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஏக்கருக்கு 2 எண்கள் விளக்கு பொறி அமைத்து பூச்சியினை கவர்ந்து அழிக்க வேண்டும். வயலில் தண்ணீரை நன்றாக வடிகட்டி பயிர்களை பட்டம் பிரித்து சூரிய ஒளி வேர்பகுதியில் படும்படி செய்ய வேண்டும். வேப்ப எண்ணெய் 3சதம் கொண்ட மருந்தினை 6லிட்டர் ஏக்கருக்கு அல்லது பின்வரும் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து பூச்சியினை கட்டுப்படுத்தலாம். புகையானுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் மருந்துகள் ஏக்கருக்குஇமிடாகுளோபிரிட்80 மிலி, பிப்ரோசன் 320 மிலி, தையோமீதாக்சேம் 100 கி, பிப்ரோமைசின் 400 மிலி உள்ளிட்ட மருந்துகளை அவசியம் புகையான் பாதிக்கப்பட்ட நெல்பயிரில் விவசாயிகள் தெளித்து முழுமையான நிவாரணம்பெறலாம். மேலும் முக்கியமாக செயற்கை பயிரித்தாராய்டு மருந்துகளை தெளிக்கக்கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய மருந்துகளை மீண்டும் பயன்படுத்தகூடாது என்று புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுதாமதிதெரிவித்துள்ளார்.

புவனகிரி வட்டார வேளாண்மை அலுவலர் ராஜராஜன், உதவி வேளாண்மை அலுவலர் வரதராஜன் ஆகியோர் புவனகிரி வட்டாரத்திலுள்ள நெல் பயிரிட்டுள்ள  விவசாயிகளை நேரில் சந்தித்து களஆய்வு செய்து புகையான் பாதிப்பு குறித்த தெளிவு மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

Tags : Agriculture Department ,attack ,area ,Bhuwanagiri ,
× RELATED வறட்சியிலிருந்து பயிர்களை...