×

உள்ளாட்சி தேர்தல் தகராறில் காவல் நிலையத்தில் தீக்குளித்த வாலிபர் சாவு

பண்ருட்டி, ஜன. 14:   பண்ருட்டி அருகே நடுகுப்பத்தில் ஊராட்சி மன்ற தேர்தல் நடந்தது. இதில் சக்திவேல் என்பவர் வெற்றி பெற்றார். தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடந்த 5ம் தேதி சக்திவேல் ஆதரவாளரான பாண்டி, முருகவேல், ராஜதுரை ஆகியோரிடம் தகராறு செய்து தாக்கி ஒரு கீற்று கொட்டகையையும் எரித்தனர். உள்ளே இருந்த ராஜதுரை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மற்ற இருவரின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தில் ராஜதுரை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சொரத்தன்குழியை சேர்ந்த ஜெயராமன்(48) என்பவரை கைது செய்து, அசோக்ராமன், ராஜி ஆகிய இருவரையும் தேடி வந்தனர். ஜெயராமனை போலீசார் கைது செய்ததை கண்டித்து தகவலறிந்த அவரது மகன் அனந்தராமன் கார் டிரைவர் சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்தார்.

தந்தை கைது செய்தது குறித்து முத்தாண்டிகுப்பம் காவல்நிலையம் சென்றார். அங்கு ஒரு கேனில் எடுத்து வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துகொண்டு ஏன் பொய்வழக்கு போட்டு என் தந்தையை கைது செய்தீர்கள் என கத்திகொண்டே வெளியே வந்தார். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்து உடலில் பற்றிய தீயை அணைத்து பண்ருட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, மேல்சிகிச்சை பெற புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அனந்தராமன் இறந்தார். இதனை அறிந்த அனந்தராமன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று மருங்கூர்- முத்தாண்டிகுப்பம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, சுரேஷ்பாபு மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சாலைமறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. டிஎஸ்பி நாகராசன் சம்பவ இடம் வந்தபோது அதே பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் வந்திருந்தார். அப்போது சாலை மறியல் செய்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். மறியலில் ஈடுபட்டவர்கள் அனந்தராமனின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட ஜெயராமனை விடுதலை செய்ய வேண்டும்.
 தவறுக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். டிஎஸ்பி நாகராசன் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்