×

கோடைகாலம் துவங்கும் முன்பே குண்டாறு வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

கமுதி, ஜன.14:  கமுதியில் கோடைகாலம் துவங்கும் முன்பே குண்டாறு வறண்டு காணப்படுவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. மதுரை வைகையாற்றில் இருந்து கிளை ஆறாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வழியாக கமுதிக்கு குண்டாறு வருகிறது. இப்பகுதியில் சுற்று வட்டார ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன் தருவதோடு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. 30 வருடங்களுக்கு முன்பு மழைக்காலம் வந்துவிட்டாலே, குண்டாற்றில் வெள்ளம் வரும் என்ற காலம் போய், தற்போது குண்டாற்றில் தண்ணீர் வருமா என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் கருவேல மரம் சூழ்ந்து காணப்படுவதாலும், ஆற்றை சுத்தப்படுத்தி தூர்வாரவில்லை என்பதாலும் மேலும் மணல் முழுவதும் திருடப்பட்டதால் கட்டாந்தரையாக காணப்படுகிறது. மழை காலங்களில் வரும் தண்ணீரை கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகின்றன. பெரிய ஷட்டர் பகுதியில் சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதிகளுக்கு தண்ணீரை பிரித்து விடும் பெரிய மதகுகள் எப்போதும் பழுதாகவே காணப்படுகிறது. இதனால் வரும் தண்ணீரை தேக்க முடியாமல் வீணாகி விடுகிறது. இதற்கு பொதுப்பணித் துறையின் அலட்சியமே காரணம். இதனால் இப்பகுதியில் கோடை காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் குண்டாறு செல்லும் பகுதிகளில் தனியார் ஆக்ரமிப்பு அதிகமாக காணப்படுவதால் குண்டாறே காணாமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது. வரும் காலம் இப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் கோடை காலம் துவங்கும் முன்பே வறண்ட பாலைவனம் போல காட்சியளிக்கிறது. குண்டாற்றை தூர்வாரி, மழைநீரை சேகரிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால கனவாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Drinking water shortage ,storm ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...