×

மக்காச்சோள பயிருக்கு காப்பீடு இழப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டி, ஜன.14: கடந்த 2018-19ம் ஆண்டு மக்காச்சோளத்திற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை கோவில்பட்டி தாலுகாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி அருகே கடலையூர் மற்றும் சிதம்பராபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி, பெருமாள்பட்டியில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.  இதனால் பிற கிராமங்களில் ஏக்கருக்கு ரூ.13 ஆயிரம் வழங்கியதை போல் தங்களது கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இதே தொகையை வழங்க வேண்டும், கடந்த 2016-17ம் ஆண்டிற்கான பருத்தி பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு 2019-20ம் ஆண்டில் பயிர் காப்பீடு மற்றும் நஷ்டஈடு வழங்கக்கோரி லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி கிராம விவசாயிகள் லிங்கம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

  போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் லெனின்குமார் தலைமை வகித்தார். லிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பிச்சையம்மாள், பெருமாள்பட்டி பஞ்சாயத்து தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் பாலமுருகன், ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர் தமிழரசன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 தகவல் அறிந்து கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் உங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் மணிகண்டன் தெரிவித்ததையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்