பாவூர்சத்திரம், ஜன.14: தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள பிரசித்திபெற்ற ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில் மார்கழி மஹோத்ஸவ விழாவில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. விழாவில் மாலை 6 மணி முதல் மாப்பிள்ளை அழைப்பு, பெண்கள் கோலாட்டம், கும்மி அடித்தல், தொடர்ந்து மாலைமாற்றும் வைபவம், ஊஞ்சல் சேவை, ஆண்டாள் கனவு கண்ட வாரணம் ஆயிரம் என்ற பிரபந்தம் மற்றும் அதற்கான பஜனை, கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம் ஆகியன கோலாகலமாக நடந்தன. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பழவகைகள், சீர் வரிசைகள் கொண்டு வந்தனர். இவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்ட பிறகு பிரசாதமாக பெற்றுச் சென்றார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் தைப்பொங்கல் திருநாளையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனை நாளை (15ம் தேதி) நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ரவி பட்டச்சாரியார் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.