×

சிறுவாணி 2வது குடிநீர் திட்டம் முடக்கம்

கோவை, ஜன. 14:கோவையில் சிறுவாணி இரண்டாவது குடிநீர் திட்டம் முடங்கி கிடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில், கேரள எல்லையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. சிறுவாணி அணை திட்டம் கடந்த 1931-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. அப்போது, 44 லட்சம் ரூபாய் செலவில் சிறு குட்டைபோல் நீர் தேக்கம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது. 1949-ம் ஆண்டில், 450 மி.மீ. விட்டம் கொண்ட இரும்பு குழாய் பதிக்கப்பட்டு, காட்டு வழியாக குடிநீர் பெறப்பட்டது. 1954-ம் ஆண்டில் சிறுவாணி நீர்த்தேக்க பரப்பு மேலும் விரிவானது. மாநில சீரமைப்புக்கு பின்னர் சிறுவாணி அணை கேரள மாநிலத்திற்கு சொந்தமாகி விட்டது. இந்நிலையில், தமிழகம்-கேரளத்திற்கு இடையே தினமும் 101.4 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறும் வகையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கடந்த 26-04-1966 அன்று முடிவு எடுக்கப்பட்டது. 99 ஆண்டுகள், சிறுவாணி குடிநீரை தமிழக மக்கள் பயன்படுத்தலாம், தேவைப்பட்டால் ஒப்பந்த காலத்தை நீடிக்கலாம் என கடந்த 1973-ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 21-08-1976 அன்று தமிழக அரசு ரூ.16.16 கோடி செலவில் புதிய அணை கட்டும் பணியை துவக்கியது. கடந்த 1982ம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழா எதுவும் நடத்தாமல்  சிறுவாணி அணை திட்டம் நடைமுறைக்கு வந்தது.

 சிறுவாணி அணையின் நீர்த்தேக்க பரப்பு 22.6 சதுர கி.மீ. ஆகும். இந்த அணைக்கு முக்தியாறு, பட்டியாறு உள்ளிட்ட 37 ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் ஆண்டுதோறும் 1,800 மி.மீ. முதல் 2,100 மி.மீ. வரை மழை பெய்கிறது. புதிய அணை கட்டிய பின், 16 முறை அணை நீரின்றி வறண்டு போய்விட்டது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர். இந்த அணையில், 258 நாட்களுக்கு தேவையான குடிநீரை தேக்கிவைக்க முடியும்.
சிறுவாணி குடிநீரை கோவை மாநகராட்சி மக்கள் மற்றும் வழியோரத்தில் உள்ள 11 கிராமங்களை சேர்ந்த 16.4 லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அணையில் 60 சதவீதம் நீர் தேங்கி உள்ளது. ஆசியாவின் 2வது தரமான குடிநீர் என யுனெஸ்கோ அறிவித்து, உலக பெருமை பெற்றது இந்த சிறுவாணி குடிநீர். சிறுவாணி குடிநீர் திட்டத்துக்கு மாற்றாக, பெரியாறு குடிநீர் திட்டத்தை (சிறுவாணி 2) செயல்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லையில், சிறுவாணி அணையின் அடிவாரத்தில் பெரியாறு (காஞ்சிமா நதி) அமைந்துள்ளது. மங்கலம்பாளையம், சின்னாறு (கல் கொத்தி மலை), கோவை குற்றாலம், நண்டங்கரை, முண்டந்துறை அணைக்கு வரும் 30க்கும் மேற்பட்ட நீரோடைகளை ஒருங்கிணைத்து பெரியாறு திட்டம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக, சாடிவயல் மரப்பாலம் வனத்தில் நீர் தேக்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கே சிறுவாணியின் பழைய குடிநீர் குழாய் (500 மி.மீ. விட்டம் கொண்டது) ஏற்கனவே உள்ளது. இந்த குழாய் மூலமாக குடிநீரை 3 கி.மீ. தூரத்திற்கு வனப்பகுதி வழியாக சிறுவாணி சுத்திகரிப்பு நிலையம் கொண்டுசெல்ல முடியும். பெரியாற்றில் வரும் நீர்வரத்திற்கு ஏற்ப தினமும் 3 முதல் 4 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும் என கணக்கிடப்பட்டது.
இத்திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆனால், நிறைவேற்றப்படாமல் நீண்ட காலமாக முடங்கி கிடக்கிறது. இத்திட்டத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் நகரில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இத்திட்டம், 3 முறை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், செயல்பாட்டுக்கு வரவில்லை.

Tags : Shrivani ,
× RELATED சிறுவாணி 2வது குடிநீர் திட்டம்...