×

பாரதியார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை உடற்கல்வி பட்டப்படிப்பு அங்கீகாரம் ரத்து

கோவை,ஜன.14:போதிய ஆவணங்களை சமர்பிக்காததால் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இளங்கலை உடற்கல்வி பாடத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேசிய கல்வி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் கடந்த 1973-ம் ஆண்டு தேசிய கல்வி பயிற்சி நிறுவனம் துவங்கப்பட்டது. ஆசிரியர் கல்வியை மேம்படுத்தல், தரப்படுத்தல் மற்றும் அது சார்ந்த பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும் வகையில் கடந்த 1993-ம் ஆண்டில் தேசிய ஆசிரியர் கல்வி நிறுவன சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தி கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, அங்கீகாரத்தை புதுப்பிப்பது, ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். நடப்பு ஆண்டிற்கான தென் மண்டல கவுன்சில் கூட்டம் கடந்த ஜன 7-ம் தேதி துவங்கி 9-ம் தேதி வரை நடந்தது. இதில் தமிழகம் உள்ளிட்ட தென்னக மாநிலங்களில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் இளங்கலை உடற்கல்வி பட்டப்படிப்பிற்கான அங்கீகாரத்தை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிமுறைகளின்படி தேசிய கல்வி பயிற்சி நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை முறையாக சமர்பிக்காததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களை சமர்பிக்காதது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் விளக்க அறிக்கை அனுப்பப்பட்டது. அதேபோல கடந்த அக்டோபர் மாதம் இறுதி விளக்க அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் பாரதியார் பல்கலைக்கழகம் தரப்பில் இதற்கு பதிலளிக்கப்படாததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் கூறியதாவது:- தேசிய கல்வி பயிற்சி நிறுவனம் கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்குமாறு கூறியிருந்தது. பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 18-ம் தேதியே ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் நிலம், கட்டிடம் சார்ந்த சில ஆவணங்களை அசல் ஆவணங்களாக சமர்பிக்க சொல்லியுள்ளனர். இது சம்பந்தமான ஆவணங்களை சமர்பிக்கும் பணியை ஏற்கனவே துவங்கி விட்டோம். இதனால் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை. அங்கீகாரம் கிடைத்து விடும். இவ்வாறு காளிராஜ் கூறினார். ஆவணங்களை பதிவேற்றம் செய்வதில் பிரச்னை இருப்பதாக பல்கலைக்கழகம் தரப்பிலும், ஆவணங்களின் அசல் நகலை நேரடியாக வழங்கினால் மட்டுமே பரிசீலனை செய்வோம் என்று தேசிய கல்வி பயிற்சி நிறுவனமும் கூறியுள்ளது. இந்நிலையில் தேவையான ஆவணங்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும்,  ஒரு சில நாட்களில் ஆவணங்கள் கவுன்சில் வசம் சென்றுவிடும் என்றும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். ஆனால் இனிமேல் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டாலும் அடுத்த முறை கவுன்சில் கூட்டம் நடக்கும்போதுதான் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளும் வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது. இதனால் தற்போது பயிற்றுவிக்கப்படும் படிப்புக்கு அங்கீகாரம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அங்கு கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.


Tags :
× RELATED மகப்பேறு, டயாலிசிஸ், நரம்பியல்...