×

இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி 95 சதவீதம் நிறைவடைந்தது

ஈரோடு, ஜன.14: ஈரோடு மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து உற்பத்தியும் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச வேட்டி, சேலைகள் ஈரோடு, திருச்செங்கோடு, கோவை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல்துறை சார்பில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்திற்கு அதிகளவு உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் கைத்தறி துணிநூல் துறை சார்பில் 60 லட்சம் சேலைகளும், 66 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய ஆர்டர் பெறப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 43 கூட்டுறவு சங்கங்கள் மூலம் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி துவங்கப்பட்டு தற்போது 95 சதவீத உற்பத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சதவீத உற்பத்தியை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகள் அனைத்தும் தரம் பார்க்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலவச வேட்டி, சேலை உற்பத்தியை தொடர்ந்து விரைவில் இலவச சீருடைகளுக்கான ஆர்டர் பெறப்பட உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ஆனந்தகுமார் கூறியதாவது: தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இலவச வேட்டி, சேலைகள், சீருடைகள் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. இலவச வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக ஆர்டர் பெறப்பட்டு 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சதவீதம் ம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.
இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் வேட்டிகள் 6,331 தறிகள் மூலமாகவும், சேலைகள் 6,785 தறிகள் மூலமாகவும் நெய்யப்பட்டது. இந்த பணியில் 12 ஆயிரம் நெசவாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், வேட்டிக்கு 24 ரூபாயும், சேலைக்கு 43 ரூபாயும் கூலியாக கொடுக்கப்பட்டது. இதற்கு தேவையான நூல்கள் அனைத்தும் கன்னியாகுமரி, எட்டையபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகள் மூலம் பெறப்பட்டு நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது, இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதைத்தொடர்ந்து இலவச சீருடைகள் உற்பத்திக்கான ஆர்டர்கள் பெறப்பட்டு விரைவில் சீருடை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : vet ,
× RELATED விஐடி கலை கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள்