×

முசிறி பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

முசிறி, ஜன.14: முசிறி பகுதியில் மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி அருகே உள்ள உமையாள்புரத்தில் தினேஷ் (28) என்ற வாலிபருக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவர் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் முசிறி பரிசல் துறை ரோடு பகுதியில் வசிக்கும் சிவக்குமார் (41) என்பவருக்கு கடந்த 4 நாட்களாக மர்ம காய்ச்சல் இருந்துள்ளது . இவர் ரத்தப் பரிசோதனை செய்ததில் இவரது ரத்த தட்டணுக்கள் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிவகுமார் முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முசிறியில் ரத்தினகுமார் என்ற வாலிபர் காய்ச்சல் காரணமாக இறந்து போனார் என கூறப்படுகிறது. மேலும் முசிறியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பொது மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உடல் வலியும் விட்டுவிட்டு காய்ச்சலும் இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை நேரத்தில் கிராமப் பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் துரைராஜ் என்பவர் கூறும்போது, முசிறி தாலுக்காவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரத்துறையினர் நேரடியாக சென்று சுகாதாரம் சரியாக உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதோடு மருத்துவ முகாம்கள் அமைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திருச்சி கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : public ,spread ,area ,Musiri ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...