×

மாடுகளுக்கு அணிவிக்கப்படும் பிளாஸ்டிக் மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும்

கும்பகோணம், ஜன. 14: மாட்டு பொங்கல் விழாவின்போது மாடுகளுக்கு அணிவிப்பதற்காக விற்பனைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் மாலைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பி மற்றும் நரம்புகளினால் தயார் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மாலைகளால் மாடுகளின் கழுத்திற்கு அணிவதால், கழுத்தில் பாதிப்பு உண்டாகும் நிலை உருவாகியுள்ளது. மாட்டு பொங்கல் பண்டிகை வரும் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீட்டில் மாடுகளை அதிகாலையிலேயே ஆற்றுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டுவர். பின்னர் மஞ்சள், குங்குமம், மலர்மாலை அணிவித்து வீட்டுக்கு அழைத்து வருவர். இதையொட்டி 15ம் தேதி இரவு சாணத்தால் இரண்டு பிள்ளையார் செய்து அதில் அருகம்புல் சாத்துவர். இதைதொடர்ந்து சாணததால் நான்கு அறைகளை கொண்டு தொட்டி அமைப்பார்கள்.

அதில் ஒரு அறையில் தயிர், இரண்டாவது அறையில் சா்க்கரை பொங்கல், மூன்றாவது அறையில் வெண்பொங்கல், நான்காவது அறையில் பால் ஊற்றி வைப்பர். தொட்டியை சுற்றிலும் நவதானியங்களும் தெளித்து விடுவர். அந்த தொட்டியின் மேல் ஆவாரம்பூ, பரங்கி பூ, நெல்லிகொத்து, நெற்கதிர், முறுக்குகள்ளி, பூலான் பூக்களை மேலே வைப்பார்கள். அதன்முன் இருபுறங்களிலும் வேப்பமர குச்சியை பதித்து உலக்கையை போட்டு வைத்து விடுவார்கள். மேலே செவந்தி பூவை கொண்டு அலங்கரித்து வைத்திருப்பர். மாட்டு தொழுவத்தில் மாவிலை தோரணங்கள், பூக்கொத்துகளை கட்டி அழகுபடுத்துவர். வீட்டின் உள்ளே மாடுகளுக்கு முன்பு புதுப்பானையில் புத்தரிசியால் பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டுவர். பின்னர் மாடுகளை அவிழ்த்து விடுவர். அப்போது ஊரில் உள்ள இளைஞா–்கள் தங்களது திறமைகளை காட்டும் விதமாக அவிழ்த்து விடும் மாடுகளை அடக்கியும், மாடுகளின் கழுத்தில் உள்ள மாலைகளையும் பறிப்பர்.

மாடுகளை அவிழ்த்து விடுவதற்கு முன் அதற்கு மாலைகளை அணிவர். இதற்காக கம்பி மற்றும் நரம்புகளால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மாலைகள் விற்பனைக்காக வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாடுகளுக்கு அதிகளவில் கம்பி, நரம்புகளால் செய்த மாலைகளை பெரும்பாலானோர் அணிவித்து விடுகின்றனர். இதுபோன்ற மாலைகளை அணிவதால் மாடுகளை பிடிக்கும் போதோ அல்லது மாட்டின் கழுத்தில் உள்ள மாலைகளை பறிக்கும் போதோ மாட்டுக்கோ, அல்லது அதை பறிக்கும் வாலிபர்களுக்கோ காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மாடுகள் மற்றும் கன்றுகள் தெரியாமல் தின்றுவிட்டால் அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே பிளாஸ்டிக் மாலைகள் விற்பனை செய்வதை தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா