×

பாபநாசம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல்

பாபநாசம், ஜன. 14: பாபநாசம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி நெற்பயிர்களை தாக்கியுள்ள புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாபநாசம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா சாகுபடி வயல்களில் புகையான் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் தெரிகிறது. தழைச்சத்து உரங்களை தேவைக்கு அதிகமான அளவில் இடுவது, வயலில் தண்ணீர் தொடர்ந்து அதிகளவில் தேங்கியிருப்பது மற்றும் குறுகிய இடைவெளியில் அதாவது மிகவும் நெருக்கமாக நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் போதமான அளவு சூரிய வெளிச்சமானது தூர்களில் படாமல் போவதாலும், போதிய காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் புகையான் பூச்சியின் தாக்குதல் காணப்படும்.

பெண் பூச்சியானது வெண்மையான நீண்டு உருண்ட மற்றும் நுனியில் சிறிது பெருத்த 9 முதல் 33 முட்டைகளை குவியலாக இடும். ஒரு பெண் பூச்சியானது 200 முதல் 300 முட்டைகள் வரை இடும். முட்டையில் இருந்து 5 முதல் 9 நாட்களில் இளம் குஞ்சுகள் வெளிவரும். முதல்நிலை குஞ்சுகள் வெள்ளை நிறமாகவும், பின்பு பழுப்பு நிறமாகவும் மாறும். 5 வளர்ச்சி நிலைகளை உடைய இவை 13 முதல் 15 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த பூச்சிகளாக மாறும். பழுப்பு நிறமுடைய முழு வளர்ச்சியடைந்த புகையான் தூர்களின் அடிப்பகுதிகளில் காணப்படும்.

ஒவ்வொரு பயிர் காலத்திலும் 3 அல்லது 4 தலைமுறைகள் தோன்றும்படி இதன் வாழ்க்கை சுழற்சி அமைந்துள்ளது. இதன் வளர்ச்சி பருவம் 10 முதல் 20 நாட்களை கொண்டது. புகையான் பூச்சியின் இளம்குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் அதிகளவில் கூட்டம் கூட்டமாக தூர்களின் அடிப்பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சும். இதனால் நெற்பயிர் முழுவதும் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறி பின்பு சாய்ந்து விடும். மேலும் தாக்குதலுக்கு உள்ளான தண்டு பகுதியில் துர்நாற்றம் வீசும். இவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். வயல்களில் அரைவட்ட வடிவமாக பயிர் புகைந்தது போன்று ஆங்காங்கே திட்டு திட்டாக காணப்படும். எனவே இப்பூச்சிக்கு புகையான் என பெயர் வந்தது. கதிர்கள் பால் பிடிக்கும் பருவத்துக்கு முன்பே காய்ந்து விடுவதால் மணிகள் உருவாவதும் தடைபடும் அல்லது உருவாகும் கதிர் பதராகிவிடும். இதன் தாக்குதல் பயிரின் ஆரம்பநிலை முதல் அறுவடை வரை காணப்படும். இந்த புகையான் நெற்பயிரில் புல் குட்டை, வாடல் குட்டை மற்றும் கிழிந்த குட்டை ஆகிய நச்சுயிரி நோய்களை பரப்புகிறது. புகையான் பூச்சியின் தாக்குதலால் 10 முதல் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதார சேதநிலையாக ஒரு தூருக்கு ஒரு பூச்சி காணப்படுதல் அல்லது ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி காணப்படும் இடங்களில் தூருக்கு இரண்டு பூச்சிகள் காணப்படும்.

இதற்கு தண்ணீர் தேங்கி நிற்காமல் வயலை சீராக சமப்படுத்த வேண்டும். வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும். இதன் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்ட உடனே வயலில் தேங்கியுள்ள தண்ணீரை சுத்தமாக வடித்து விட வேண்டும். தழைச்சத்து உரங்கள் அளவுக்கு அதிகமாக இடுவதை தவிர்த்து விட வேண்டும். தாக்குதலுக்கு உண்டான பயிர்களை பட்டம் பிரித்து வயலின் மற்ற பகுதிகளுக்கு புகையான் பூச்சி பரவாமல் தடுக்க வேண்டும்.
நெற்பயிர் பூப்பதற்கு முன்பாக 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். புகையான் பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டினால் ராசயன பூச்சிக்கொல்லி மருந்தான இமிடா குளோர்பிட் 17.8 எஸ்.எல்- 40 மிலி அல்லது தயாமீத்தாக்ஸாம் 25 டபிள் ஜி- 40 கிராம் அல்லது பிப்ரோனில் 5 எஸ்.சி- 500 கிராம் அல்லது பியபூப்ரோ பேசின் 350 மிலி இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டர் காலை அல்லது மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் பயன்படுத்தி தூர்களின் அடிப்பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இரண்டு வகையான மருந்துகளை ஒன்றாக கலந்து தெளிக்க கூடாது. புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மறு உற்பத்தி திறனை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளான செயற்கை பையிரிதிராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால் பாஸ் போன்ற மருந்துகள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை
புகையான் நெற்பயிரில் புல் குட்டை, வாடல் குட்டை மற்றும் கிழிந்த குட்டை ஆகிய நச்சுயிரி நோய்களை பரப்புகிறது. புகையான் பூச்சியின் தாக்குதலால் 10 முதல் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Tags : pest attack ,region ,Samba ,Papanasam ,
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்