×

15 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டது காட்சிப்பொருளான டிரான்ஸ்பார்மர்: மின்வாரியம் மெத்தனம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் 15 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டுககு கொண்டு வராததால் காட்சிப் பொருளாக மாறியுள்ளது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெரு, சேணியம்மன் கோயில் தெரு, டி.எச்.சாலை ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த பிரச்னை காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும், வீடுகளில் உள்ள டிவி, மின்விசிறி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகி வருகிறது.

குறிப்பாக, இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால், அப்பகுதி மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தங்களது பகுதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும், என மின்வாரியத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், தண்டையார்பேட்டை பழைய வைத்தியநாதன் தெருவில் 15 லட்சம் செலவில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.  ஆனால் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், காட்சிப் பொருளாக மாறியுள்ளது.

இதனால், டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டும், குறைந்த மின் அழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடை பிரச்னையால் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குறைந்த மின் அழுத்த பிரச்னையால் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தவித்து வருகிறோம். எங்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் புதிதாக அமைத்த டிரான்ஸ்பார்மரை இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் காட்சிப் பொருளாக மாறியுள்ளது.

இதனால், அரசு நிதி வீணடிக்கப்படுவதுடன், மின் தடை பிரச்னையால் மக்களும் அவதிப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கே இதற்கு காரணம். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், தண்டையார்பேட்டை பழைய வைத்தியநாதன் தெருவில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

Tags : object transformer ,
× RELATED 15 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டது...