×

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் தொடரும் மணல் கொள்ளை நிலத்தடிநீர் குறைந்து வரும் அபாயம்

மயிலாடுதுறை, ஜன.14: மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை தொடர்வதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நள்ளிரவு மற்றும் விடியற்காலை நேரத்தில் லாரி லாரியாக மணற் கொள்ளை நடைபெறுவது வாடிக்கை. கள்ளத்தனமாக மணல் வைப்பதற்கு ரூ.30 ஆயிரம் வரை தொகை வசூலிக்கப்படுகிறது. மழைகாலம் முடிந்து வெயில்காலம் துவங்க இருப்பதால் வீடுகட்டும் பணி மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 அண்டுகளாக கொள்ளிடம் ஆற்றில் முடிகண்டநல்லூர் பகுதியிலிருந்து சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஊர்வரை பல்வேறு இடங்களில் அரசு மணற்குவாரி அமைத்து மணலை விற்றதுடன் அரசு நடத்திய மணற்குவாரிகளில் 75 சதவீதம் தொகையை வசூல் செய்து தனியார் லாபமடைந்தனர்.

இதற்கிடையே போலி பர்மிட்டுகள், திருட்டு மணல் போன்றவற்றில் மணல் மாபியாக்கள் உருவாகி பலநூறு கோடிக்கு அதிபதியானார்கள். கொள்ளிடம் ஆற்றில் நடைபெற்ற மணற்கொள்ளையால் பல கொலைகள் நடந்துள்ளது, தற்பொழுது மணல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் தலையிட்டதால் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளியதால் கொள்ளிடம் ஆற்றை ஆதாரமாக கொண்டு குடிநீர் கொண்டு செல்லும் ஊர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் என்று இங்கே எடுக்கப்படும் கொள்ளிடம் குடிநீர் சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகாக்களைத் தாண்டி வேதாரண்யம் வரை செல்கிறது. தொடர்ந்து மணல் அள்ளியதால் கொள்ளிடத்தின் நீர் மட்டம் என்பது வருடா வருடம் குறைந்துகொண்டே வருகிறது.

இதில் மயிலாடுதுறை நகராட்சிக்கு முடிகண்டநல்லூர் பகுதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் போர் போட்டு தண்ணீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தாமல் 20 அடி ஆழம்வரை கிணறு அமைத்து அதன் பக்கவாட்டில் துளையுள்ள பைப்லைன்களை இணைத்து கொள்ளிடம் ஆற்றில் ஊரும் தண்ணீர் மட்டும் பைப்லைன் வழியாக கிணற்றில் தேங்கும் அந்த தண்ணீரை மட்டுமே உறிஞ்சி எடுத்து மயிலாடுதுறை நகராட்சி உபயோகப்படுத்தி வருகிறது.
தொடர்ந்து முடிகண்டநல்லூர் பகுதியில் மணற்குவாரிகள் செயல்பட்டு வந்ததால் நீர் பிடிக்கும் பகுதியல் பள்ளம் ஏற்பட்டு கிணற்றில் தேங்கும் நீரின் அளவு குறைந்துவிட்டது. இதனால் மயிலாடுதுறை நகராட்சிக்கு காலை மாலை இருவேளையும் அளித்துவந்த குடிநீர் பல ஆண்டுகளாக காலை நேரத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது அரசு மணற் குவாரிகள் இயங்காததால் இப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். எக்காரணத்தைக் கொண்டும் இப்பகுதியில் மணல் விற்பனைக்கு அரசு அனுமதிக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் காலை கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் போடப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்களுக்கிடையே லாரிகள் மூலம் மணல் ஏற்றப்படுகிறது என்று போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சென்றபோது சித்தமல்லி தைலத்தோப்பில் 2 யூனிட் ஆற்றுமணல் ஏற்றிய லாரியைக் கண்டு போலீசார் சென்றபோது லாரியிலிருந்த நபர்கள் தப்பியோடி தைலமரக்காட்டில் பதுங்கிக் கொண்டனர், போலீசார் லாரியைகைப்பற்றி எடுத்துச்சென்று வழக்குப் பதிவுசெய்து லாரி ஓட்டுனர் மற்றும் லாரி உரிமையாளர்களை தேடிவருகின்றனர். திருட்டு மணற்கொள்ளையையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

Tags : Kolli River ,Mayiladuthurai ,
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...