×

வேலூர் மத்திய சிறையை சுற்றியுள்ள காலி நிலத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து அசத்தும் நன்னடத்தை கைதிகள் சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையை சுற்றியுள்ள 20 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்தும் நன்னடத்தை கைதிகள் அசத்தி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றங்கள் செய்து சிறைக்கு செல்லும் கைதிகள், தண்டனை காலம் முடிந்து திரும்பும் போது, சுயத்தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சிறைக்குள் பல்வேறு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறைக்குள் கைதிகள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறை நிர்வாகம் ஏற்படுத்தி தருகிறது. வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் நன்னடத்தை கைதிகள் மூலம் போலீசாருக்கான ஷூக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டு சிறை வளாகத்தில் 2 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, அதில் விளைந்த காய்கறிகள் கைதிகளுக்கான உணவுக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதற்கான செலவினம் கணிசமாக குறைந்தது. இதனால் காய்கறி தோட்டம் 4 ஏக்கர்களாக விரிவுப்படுத்தப்பட்டது. இதில் விளைந்த காய்கறிகள் சிறைச்சாலை தேவைக்குப்போக மீதமாகும் காய்கறிகள் சிறை பஜார் மூலம் வெளியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையில் வேலூர் சிறைகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் ஆலை ₹2.64 கோடியில் அமைக்கப்பட்டு, அதில் இருந்து வெளியேறும் நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையை சுற்றியுள்ள காலியிடங்களில் முள்ளங்கி, குச்சி கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய் குறுகிய கால பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. மேலும், அத்துடன் கொய்யா, மா, நெல்லி மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், மூலிகை தோட்டம் அமைக்கப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 350 ரோஜா செடிகள் வளரக்கப்பட்டு, ரோஜா தோட்டம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமா நடந்து வருகிறது. தற்போது, 1 ஏக்கர் பரப்பளவில் கொத்தவரை நடும் பணியை தொடங்கி உள்ளனர்.  இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, கண்காணிப்பாளர் ஆண்டாள் ஆகியோரின் அறிவுரைப்படி வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தை பசுமையாக மாற்றும் பணியில் மா, கொய்யா, நெல்லி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. வேலூர் சிறை சுற்றியுள்ள சுமார் 35 ஏக்கரில் தற்போது 20 ஏக்கரில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 1 ஏக்கரில் கொத்தவரை நடும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து வேளாண் அதிகாரிகளின் உதவியுடன் சிறைச்சாலை சுற்றியுள்ள மண்ணின் வளத்தை ஆய்வு செய்து அதற்கான பயிர் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றனர்.

Tags : Prison officials ,land ,Vellore Central Jail ,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை