×

2 மாத பரோல் முடிந்ததும் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர் பேரறிவாளன் புழல் சிறையில் அடைப்பு

வேலூர், ஜன.12: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 2 மாத பரோல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு கடந்த 2018ம் ஆண்டு மாற்றப்பட்டார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தை குயில்தாசனுடன் இருக்கவும், சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி வேலூர் மத்திய சிறைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஒரு மாதம் பரோலுக்கு ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கிய ஒரு மாத பரோல் டிசம்பர் 13ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், பேரறிவாளன், தந்தையின் உடல்நலக்குறைவால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கும் சிறைத்துறைக்கும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. 2 மாத பரோல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த பேரறிவாளனை நேற்று காலை 11.30 மணியளவில் வேலூர் மத்திய சிறைத்துறை டிஎஸ்பி விநாயம் தலைமையில் 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்து ெசன்றனர். இதையடுத்து, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது: 2 மாதம் பரோல் முடிந்து என் பிள்ளை சிறைக்கு சென்றான். நாளை மறுநாள் பொங்கல். இந்த பொங்கலுக்கு எங்களுடன் இருப்பான் என ஆசைப்பட்டோம். பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை குறித்தும் பேரறிவாளனின் சிகிச்சைக்கும் அவரது எதிர்கால திட்டத்திற்கும் பரோல் கேட்டிருந்தோம். சென்னையில் 5 நாட்களாக நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம். நாங்கள் மறுபடியும் பரோலை நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். 3 நாட்களுக்கு முன் வரை எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்காததால் பிள்ளையோடு ஒருநாளாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டோம். நிச்சயமாக இந்த பரோல் கிடைக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எனது பிள்ளையின் விடுதலைக்காக நாங்கள் எத்தனை காலம் காத்திருப்போம் என்பது தெரியவில்லை. எனது மகனுக்கும் சிறுநீர் தொற்று நோய் இருப்பதால் சரிவர கவனிக்காமல் விட்டதால் புண்ணாகி வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இதற்காக இந்த பரோலை நீட்டித்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். ஆனால் பரோல் கிடைக்கவில்லை. இருந்தாலும் எனது மகனை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் என் கையை பிடித்துக்கொண்டு உனது மகனை உன்னிடம் சேர்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்தநம்பிக்கையில் தான் இத்தனை காலம் வாழ்க்கை ஓட்டிக் கொண்டு வருகிறேன். அந்த நம்பிக்கை இன்னும் உள்ளது. இந்த அரசு எனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

Tags :
× RELATED இளம்பெண் ஆபாச வீடியோவை நண்பர்களுக்கு...