×

திருப்பதி தேவஸ்தான டிவி அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய தொலைக்காட்சி தலைவர் பணி நீக்கம் செய்யக்கோரி பெண்கள் கூட்டமைப்பினர் தர்ணா

திருப்பதி, ஜன.13: பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய வெங்கடேஸ்வரா தொலைக்காட்சி தலைவர் பிருத்திவிராஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறி அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர். திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியின் தலைவராக நடிகர் பிருத்திவிராஜ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட செயலாளர் சாய்லட்சுமி தலைமையில் திருப்பதி கொரல குண்டா ஜங்சன் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது மாவட்ட செயலாளர் சாய்லட்சுமி பேசியதாவது: திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் இயங்கும் வெங்கடேஸ்வரா தொலைக்காட்சி பெருமாளின் புகழை உலகம் முழுவதும் தெரிந்து கொள்வதற்காக கோயில் நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது. இதன் தலைவராக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடிகர் பிருத்திவிராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசும் தொலைபேசி உரையாடல் தற்போது வெளி வந்துள்ளது. இது மிகவும் வெட்கக்கேடானது. இப்படி பெண்கள் மீது கண்ணியம் இல்லாமல் உள்ள ஒருவரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொலைக்காட்சி தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புகழுக்கு கலங்கம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : federation ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்