கடையநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை

கடையநல்லூர், ஜன. 13: கடையநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்திலும் பேசியதோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாக முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தென்காசியில் புதிய மாவட்ட கலெக்டர், எஸ்.பி. அலுவலகங்கள் தென்காசி நகர்ப்பகுதியிலேயே அமைக்க வேண்டும். சுந்தரேசபுரத்தில் அரசு பள்ளி யின் மேற்கூரையின் ஓடுகள் அனைத்தும் உடைந்துள்ளதால் மாணவர்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இதை உடனடியாக சீரமைக்க நிதி ஒதுக்கி பணிகளை துவக்க வேண்டும். செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பபட வேண்டும். அச்சன்புதூரில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தமிழக கேரள எல்லையான புளியரை பகுதியில் உள்ள 3 சோதனை சாவடிகளை ஒருங்கிணைத்து ஒரே சோதனைசாவடியாக அமைத்தால் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்படுவதை தடுக்க முடியும். கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி திரிகூடபுரத்தில் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் பலியான தாய், மகள் உள்ளிட்ட 3 பேரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் முதல் புளியங்குடி வரையிலான பகுதிகளில் நடந்துவரும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்’’ என்றார்.

Tags : Government Hospital ,Kadayanallur ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு