×

வாகைக்குளத்தில் குவிந்துள்ள பறவைகள்

கடையம், ஜன. 13: கடையம் அருகே  வாகைக்குளத்தில்  கூடுகட்டி குஞ்சு பொறித்துள்ள பறவைகளை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் வாகைக்குளத்தை பல்லுயிர் பெருக்க மையமாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அகத்திய மலை சமுதாயம் சார் சூழல் பாதுகாப்பு மையம் 10ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பறவைகள் பார்க்கலாம் வாங்க என்ற நிகழ்ச்சிகளை பல்வேறு குளங்களில் நடத்தி வருகின்றனர். கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச்  வரை பல்வேறு வகையான பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து தங்கி குஞ்சுகள் பொறித்துச் செல்வது வழக்கம். இதையடுத்து தற்போது வாகைக்குளத்தில் ஏராளமான பறவைகள் தங்கியுள்ளன. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூரு, ஐதராபாத், திருச்சி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பறவை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள, ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இங்கு கூடு கட்டி குஞ்சு பொறித்துள்ள பறவைகளை பார்த்தும் அவற்றின் தன்மைகள் குறித்து கேட்டு அறிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்  பிரசாந்த் கூறியதாவது: ஆண்டுதோறும் இங்கு பல்வேறு வகையான பறவைகள்  வந்து கூடுகட்டி குஞ்சு பொறித்து செல்கின்றன. பறவைகள் வளர்வதற்கு குளங்களில் கருவேல மரங்கள் உள்ளிட்டவற்றை வளர்க்க வேண்டும். பறவைகளின் எச்சம் பயிர்களுக்கு சிறந்த இயற்கை உரமாக அமைகிறது. மேலும் பயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் சிறு பூச்சிகளை பறவைகள் தின்பதால் பயிர்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. இளைஞர்கள் இயற்கையையும் பறவைகளையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மூத்த சுற்றுச் சூழல் விஞ்ஞானி சுபத்ரா தேவி கூறுகையில், அகத்திய மலை சமுதாயம் சார் சூழல் பாதுகாப்பு மையத்தின்  ஆண்டு விழாவை முன்னிட்டு வாகைக்குளத்தில் பறவைகள் பார்க்கலாம் வாங்க நிகழ்ச்சியில் பல இளைஞர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். வாகைக்குளத்தில்  இதுவரை 15க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இனம் காணப்பட்டுள்ளன. இந்தக் குளத்தை பாரம்பரிய பல்லுயிர் பெருக்க மையமாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அரசு அதற்கு உரிய ஒப்புதல் வழங்கவில்லை. இந்தக் குளத்தில் அரிய வகைப் பறவைகள் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவு இருந்ததால் சிறுசிறு குளங்களிலும் தண்ணீர் நிரம்பியதையடுத்து பறவைகள் ஆங்காங்கே தங்கியுள்ளன. அரசு இந்தக் குளத்தை பாரம்பரிய பல்லுயிர்ப் பெருக்க மையமாக அறிவித்தால் மேலும் பறவைகள் வந்து செல்வதற்கான வசதிகளையும் பறவைகளுக்குப் பாதுகாப்பையும் வழங்க முடியும், என்றார்.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்