பாவூர்சத்திரம் ஜன.13: பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் 10 நாள் திருவிழா 56 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 57ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, சப்த கன்னியர்களுக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு கொடியேற்றம், அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜை, சிறுவர்கள், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கோலாட்டம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் மற்றும் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து வருகிற 21ம்தேதி வரை நடைபெறும் திருவிழா நாட்களிலும் அம்மன் சப்பர வீதிஉலா இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், நாகல்குளம் ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து கோயில் வந்தடைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சிகர விழாவான 21ம்தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மதியம் உச்சிகால பூஜை, மதியம் 12 மணி முதல் இரவு வரை அன்னதானம் நடைபெறுகிறது. இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை மற்றும் கோயில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகளும் இரவு 8 மணிக்கு சப்பர வீதிஉலா நடைபெறுகிறது. சப்பரம் கோயில் வந்தவுடன் விரதமிருந்த பக்தர்கள் கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் செய்து வருகின்றனர்.