×

காணொளி காட்சி வாயிலாக மானூர் புதிய தாலுகா கட்டிடத்தை முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்

நெல்லை, ஜன. 13:  நெல்லை அருகே புதிதாக மானூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (13ம் தேதி) காலை துவக்கிவைக்கிறார். இதையொட்டி மானூரில் நடக்கும் விழாவில் கலெக்டர் ஷில்பா, டிஆர்ஓ முத்துராமலிங்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.நெல்லை தாலுகாவில் இடம்பெற்றிருந்த குறுவட்டங்களில் தாழையூத்து, மானூர், கங்கைகொண்டான் ஆகிய 3 பிர்க்காக்களை தனியாகப் பிரித்து கடந்த 2016ம் ஆண்டு புதிதாக மானூர் தாலுகா உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதில் கங்கைகொண்டான் மக்கள், நெல்லை தாலுகாவிலேயே இடம்பெற விரும்பியதால், கங்கைகொண்டான் பிர்க்கா மீண்டும் நெல்லை தாலுகாவுடன் இணைக்கப்பட்டது. இதனிடையே நெல்லையை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்து தமிழக அரசு அக்டோபர் 12ம் தேதி ஆணைப் பிறப்பித்தது. தொடர்ந்து  புதிய தென்காசி மாவட்டத்தை கடந்த நவம்பர் 22ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்.

இந்த தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சங்கரன்கோவில் கோட்டத்தில்  நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரன்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட வன்னிகோனந்தல் குறுவட்டமும் இடம்பெற்றது. இதை ஏற்க மறுத்த வன்னிகோனந்தல் மக்கள் நெல்லை மாவட்டத்துடன் தொடர்ந்து இருக்க கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வன்னிகோனந்தல் குறுவட்டம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மானூர் தாலுகாவில் இணைக்கப்பட்டது. இதனிடையே மானூரில் தனியார் இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த மானூர் தாலுகா அலுவலகத்திற்கு களக்குடி சாலையில் மானூர் பஜார் பகுதியில் ரூ.2.62 கோடியில் நவீன வசதிகளுடன் இரு தளங்களுடன் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (13ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. சென்னையில் காணொளி காட்சி வாயிலாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதை திறந்துவைத்து அதன் செயல்பாட்டை துவக்கிவைக்கிறார். இதையொட்டி மானூரில் நடக்கும் விழாவில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், டிஆர்ஓ முத்துராமலிங்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Tags : Manoor ,taluk building ,
× RELATED மானூர் அருகே வீட்டிற்குள் புகுந்த பெண்ணால் பரபரப்பு