×

சேலம் மாவட்டத்தில் 2ம் கட்ட சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சேலம், ஜன.13:சேலம் மாவட்டத்தில் 2ம் கட்ட சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 23 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், 14,53,675 ஆண் வாக்காளர்களும், 14,54,036 பெண் வாக்காளர்களும், 138 இதரரும் என மொத்தம் 29,07,849 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடந்த 4, 5ம் தேதிகளில் முதற்கட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24,942 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர். இதேபோல் பெயர் நீக்கம் செய்ய 5,826 பேரும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய 3,032 பேர் மற்றும் முகவரியை மாற்றம் செய்ய 2,428 பேர் என மொத்தம் 46,228 பேர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். தொடர்ந்து 2ம் கட்ட சிறப்பு முகாம், கடந்த இரு தினங்களாக நடந்தது. மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில், இந்த முகாம் நடந்தது.

இதில், கடந்த 1ம் தேதி அடிப்படையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்கினர். குறிப்பாக, இளம் வாக்காளர்களான கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது பெயர்களை சேர்த்தனர். இதேபோல், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவம் 8 மற்றும் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து, அந்தந்த பகுதி வாக்குப்பதிவு அலுவலர்களிடம் கொடுத்தனர். இப்பணிகளை கலெக்டர் ராமன், பார்வையாளர் மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டனர். 2 நாட்கள் நடந்த 2ம் கட்ட சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க 23,148 பேர் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய 4,604 பேரும், திருத்தம் செய்ய 2,652 பேரும், முகவரி மாற்றம் செய்ய 2,794 பேரும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அடுத்த மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்