×

கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகள் முழுவதும் வெட்டி அகற்றம்

கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி அணையின் 7 பிரதான மதகுகள் முழுவதும் வெட்டி அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி அணையின் 7 பிரதான மதகுகளும், ₹19 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதியதாக மாற்றப்படுகிறது. இதற்காக பழைய 7 மதகுகளையும் வெட்டி அகற்றும் பணி, கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில், 23 தொழிலாளர்கள் அணையின் மதகுகளை வெல்டிங் வைத்து சிறு, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 6ம் தேதி அணையின் இரண்டு மற்றும் மூன்றாம் பிரதான மதகுகளை முழுமையாக வெட்டி அகற்றினர். அடுத்தகட்டமாக 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய மதகுகளை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் புதிய மதகினை தவிர, மற்ற 7 மதகுகளையும் வெட்டி அகற்றும் பணி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.

நேற்று காலை முதல், 2 புதிய மதகுகளை பொருத்துவதற்காக அணையின் தரைப்பகுதியில் 4 அடி உயரத்தில் இரும்புத் தகடுகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தி வருகின்றனர். பொங்கல் விடுமுறை முடிந்ததும், புதிய மதகுகள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் மொத்த உயரமான 52 அடியில், நேற்று 31.15 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு 125 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 158 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டுள்ளது.

Tags : rivers ,dam ,Krishnagiri ,
× RELATED இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி