×

பொங்கல் பண்டிகையையொட்டி களைகட்டும் வாரசந்தைகள்

தர்மபுரி, ஜன.13: பொங்கல் பண்டிகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் வாரச் சந்தையில் பொங்கல் பானைகள், கால்நடைகளுக்கு வண்ணக் கயிறுகள் விற்பனை கலைகட்டியுள்ளது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் வாரச்சந்தைகளில் பொங்கல் பானைகள், கால்நடைகளுக்கு வண்ணக்கயிறுகள், கோல மாவு, சுண்ணாம்பு கல், கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது. நேற்று தர்மபுரி நகரில் கூடிய சந்தைக்கு தர்மபுரி, அன்னசாகரம், சோலைக்கொட்டாய், நாயக்கன்கொட்டாய், குண்டலப்பட்டி, கடகத்தூர், சோகத்தூர், ஒட்டப்பட்டி, வெங்கட்டம்பட்டி, எட்டிமரத்துப்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. எடையை பொருத்து ₹6 ஆயிரம் முதல் ₹12 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.  ஆடுகளுக்கு கூடுதல் விலை கிடைத்ததால், ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல், இந்த வார சந்தையில் அரிசி, பருப்பு வகைகள், தானிய வகைகள், காய்கறிகள், பழ வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் கம்பைநல்லூரில் கூடிய வாரச் சந்தையில் விற்பனை களைகட்டியது. தர்மபுரி, கம்பைநல்லூர் நகரில் உள்ள நகை கடைகள், ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அதிகம் வருகை தந்ததால், தர்மபுரி- திருப்பத்தூர் சாலை, கந்தசாமிவாத்தியார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், மொரப்பூர்-இருமத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags : Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா