×

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வேண்டும்

தர்மபுரி, ஜன.13: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், 25 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் கரும்பு பதிவு செய்து, ஆலை நிர்வாகம் வெட்டி எடுத்த பின்னர், மீதமுள்ள கரும்புகளை, திருவண்ணாமலை செங்கத்தில் உள்ள கரும்பு ஆலைக்கு விவசாயிகள் கொண்டு செல்வார்கள். தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து, சுமார் 8 ஆயிரம் ஏக்கர் அளவே உள்ளது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவை காலத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, மல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான டன் கரும்புகளை அரவைக்கு கொண்டு வருவார்கள். தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், முக்கிய இடத்தை இந்த ஆலை வகித்து வந்தது. ஆண்டுக்கு 3.80 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலையின் அரவை இலக்கை எட்ட வேண்டிய கரும்பு எடை எண்ணிக்கை, படிப்படியாக டன் கணக்கில் குறைய தொடங்கியது.

குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளாக ஆலை அரவைக்கு பதிவு செய்யப்படும் கரும்பு வெகுவாக குறைந்தது. கடந்த 2014ம் ஆண்டு 2.50 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்ட இந்த ஆலையில், படிப்படியாக ஒரு லட்சம் டன், 50 ஆயிரம் டன் என சரிந்து, நடப்பாண்டு மிக சொற்பமாக 20 ஆயிரம் டன் மட்டுமே அரவைக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ஆலை நாளொன்றுக்கு, 2500 டன் அரவை செய்யும் திறன் கொண்டது. தற்போது பாலக்கோடு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை இன்னும் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அக்டோபரில் கரும்பு அரவை பணி தொடங்கும். இப்பணியில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்து போனதால், நடப்பாண்டில், 15 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, கரும்பு பூ எடுத்துள்ளதால், மேலும் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இந்த ஆலையில் அரவை தொடங்க வேண்டும் அல்லது அரவை செய்யும் மாற்று ஆலைக்கு, அரசின் செலவிலேயே கரும்புகளை அனுப்பி வைக்க வேண்டும் . இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Palakkad ,Co-operative Sugar Plant ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்