×

விவசாயிகள் போர்வையில் தர்மபுரி உழவர் சந்தையில் கடை விரிக்கும் வியாபாரிகள்

தர்மபுரி, ஜன.13: தர்மபுரி உழவர் சந்தையில் போலி விவசாயிகள் காய்கறி விற்பனை செய்வதால், காலியாக உள்ள பணிக்கு பொறுப்பேற்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். தர்மபுரி நான்குரோடு அருகே செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், 100 கடைகள் உள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி சுழற்சி முறையில் 110 விவசாயிகள், காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சராசரியாக 30டன் காய்கறி தினசரி விற்பனையாகும் இந்த உழவர் சந்தையில், விவசாயிகள் போல், போலி சான்றிதழ் வழங்கி வியாபாரிகள் சிலர் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர்.

இதை கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றும் அதிகாரி மீது மொட்டை கடுதாசி போட்டு மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் இந்த உழவர் சந்தையில் அதிகாரிகள் பணியாற்றவே தயங்குகின்றனர். இந்த சந்தையின் நிர்வாக அலுவலர் கடந்த 30ம் தேதி பணி ஓய்வுபெற்றார். அந்த பணியிடத்தை நிரப்ப, வேளாண் வணிகத்துறை முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், அதிகாரிகள் பொறுப்பேற்க தயங்குவதால், பணியிடம் இன்னும் காலியாக உள்ளது. இதுகுறித்து நுகர்வோர்கள் கூறுகையில், ‘தர்மபுரி உழவர் சந்தையில் விவசாயிகள் போர்வையில் உள்ள வியாபாரிகளை வெளியேற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், உண்மையிலேயே விவசாயிகள் பயனடைவார்கள். அதிகாரிகளும் அச்சம் இல்லாமல் பணியாற்றுவார்கள்,’ என்றனர்.

Tags : Dharmapuri Farmers Market ,
× RELATED தர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி விற்பனை