×

வறட்சி எதிரொலி பொங்கல் பண்டிகை கொண்டாட விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்தது

திருவள்ளூர், ஜன. 13: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக பருவமழை என்பது விவசாயிகள் எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி விட்டது. மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீரின்றி வறண்டு உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயிகள், தங்களின் நிலங்களில் எந்தவித பயிர்களும் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாய கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், கிணற்று பாசனத்தை நம்பி செய்த விவசாய பயிர்களும் தற்போது கருகி வருகிறது.

இவ்வாறு, விவசாயம் முற்றிலும் அழிந்து போனதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பணப்புழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக கொண்டாடிவரும், தமிழர் திருநாளான தை முதல் நாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தை பொங்கல் என்றாலே, விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளையும் நெல் பயிரை மகிழ்ச்சியுடன் அறுவடை செய்து, புதுநெல், புது அரிசியில் பொங்கல் வைப்பது வழக்கம். மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, நெல் பயிர் அதிகளவில் சாகுபடி செய்யவில்லை.

இதனால், புது நெல், புது அரிசியில் பொங்கல் வைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோன்று, பொங்கல் பண்டிகை என்றால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிவதில் ஆர்வம் காட்டுவர். வறட்சியால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால், புத்தாடை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவதை தவிர்த்துள்ளனர். தை இரண்டாம் நாள், மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், விவசாயிகள் தங்களின் மாடுகள், விவசாயத்திற்கு பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு படைப்பது வழக்கம். இந்தாண்டு, வறட்சி காரணமாக மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடமின்றி, விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்றுவருகின்றனர். இவ்வாறு, இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு, மாவட்ட பொதுமக்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. 

Tags : drought ,Pongal ,
× RELATED வறட்சியால் விளைச்சல் பாதிப்பு மேரக்காய் விவசாயிகள் கவலை