×

காக்களூர் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர்குளம் ஏரி மாசு: விவசாயம் முற்றிலும் பாதிப்பு

திருவள்ளூர், ஜன. 13: திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டை கழிவுகளை மூட்டைகட்டி தண்ணீர்குளம் ஏரியில் வீசுவதால், ஏரிநீரும், நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளதால் விவசாயமும், குடிநீரும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூரில், கடந்த 1989ம் ஆண்டு தொழிற்பேட்டையின் முதல் பிரிவும், 2008ம் ஆண்டு இரண்டாவது பிரிவும் துவங்கப்பட்டன. 283 ஏக்கரில் அமைந்துள்ள இந்த தொழிற்பேட்டையில், தற்போது 142 தொழிற்சாலைகள் உள்ளன.

இத்தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலை நிர்வாகத்தினர், ரசாயன கழிவுகளை மூட்டைகட்டி தண்ணீர்குளம் ஏரியில் வீசுகின்றனர். மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. அதோடு வரத்து கால்வாயில் குப்பைக் கழிவுகள், கோழிக்கழிவுகள், கட்டுமான கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகின்றன. இந்த ஏரியை நம்பி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது நிலத்தில் பயிரிட்டு உள்ளனர். இங்கிருந்து போர்வெல் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும் அனுப்பப்படுகிறது. மேலும், ஏரியில் ஆடு, மாடுகளையும் விவசாயிகள் மேய்த்து வருகின்றனர். ஏரியின் தண்ணீரை அருந்தும் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மாசுபட்டு வருவதால் விவசாயிகளும் ஏரியின் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர்குளம் ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...