கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் மந்தகதியில் கால்வாய் பணிகள்: அதிகாரிகள் அலட்சியம்

கூடுவாஞ்சேரி, ஜன. 13: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாகவும், இதனை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவதில்லை என்றும் பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை தற்போது 6 வழி சாலையாக உள்ளது. இதனை மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பலகோடி மதிப்பில் 8 வழி சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்க பணிகளுக்காக கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் கால்வாய் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த பணி அலட்சியப்போக்கில் நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் சாலை விரிவாக்க பணி மேற்கொள்ள வேண்டும். ஆனால், ஒரு பக்கத்தில் மட்டும் ஏனோ, தானோவென்று நடைபெற்று வருகிறது. அதில், சர்வீஸ் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் ஆகியவை சரியான முறையில் இடிக்கப்படவில்லை.

சர்வீஸ் சாலையோரத்தில் கால்வாய் கட்டும் பணியும் அலட்சிய போக்கில் நடைபெற்று வருகிறது. இதில் தரமற்ற கம்பி மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பயன்படுத்த வேண்டிய கால்வாய் ஓரிரு ஆண்டுகளுக்குள் இடிந்து விழும் அளவிற்கு தரமற்ற முறையில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதில் பணிகள் முடிவடைந்ததும் சாலையில் குறுக்கே கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது கால்வாய் இடியும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் கேட்டால், ‘‘எங்களின் ஒப்பந்ததாரர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் எங்களால் செய்ய முடியும்’’ எனவே சம்பந்தப்பட்ட மத்திய அரசின் உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Canal ,Guduvancheri GST road ,
× RELATED உடைந்து நாசமான சோலார் மின் தகடு