×

திருப்போரூரில் கிரிக்கெட் குழுக்கள் மோதல் பொக்லைன் வைத்து தோண்டி அரசு பள்ளி மைதானம் சேதம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர், ஜன. 13: திருப்போரூரில் கிரிக்கெட் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால், அரசு பள்ளி மைதானத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு தரப்பு சேதப்படுத்தியது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருப்போரூரில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியையொட்டி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் உள்ளது. இதை சுற்றிலும் மதிற்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கல்வி துறையின் பராமரிப்பில் இருக்கும் இந்த விளையாட்டு மைதானம் பெரிய அளவில் இருப்பதால் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி வட்ட, மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடக்கும் விளையாட்டு போட்டிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.

மேலும், விடுமுறை தினங்களில் விளையாட்டு ஆர்வமுள்ள இளைஞர்களும், முன்னாள் மாணவர்களும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் கிரிக்கெட், ஓட்டப்பந்தம், காலையில் நடைபயிற்சி போன்றவற்றுக்கு இந்த மைதானத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும்போது பல்வேறு கிரிக்கெட் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிரிக்கெட் போட்டி நடத்த திருப்போரூரை சேர்ந்த ஒரு விளையாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இதை சீர்குலைக்கும் வகையில் சிலர் உள்ளே புகுந்து பள்ளி நிர்வாகத்தின் அனுமதியின்றி கிரிக்கெட் பிட்ச்சை பொக்லைன் இயந்திரம் மூலம் சேதப்படுத்தி விட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் திருப்போரூர் போலீசில் புகார் செய்தனர்.
இதனால் பள்ளி நிர்வாகம் இந்த விளையாட்டு மைதானத்தின் கதவுகளை பூட்டி வைக்க வேண்டும். முறையான விளையாட்டு போட்டிகளை நடத்தும் குழுக்களுக்கு மட்டும் அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குடிகாரர்கள் தஞ்சம்
இந்த விளையாட்டு மைதானத்தில் இரவு நேரங்களில் மது அருந்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தங்களது கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை மைதானத்திற்குள் எடுத்து வந்து நிறுத்திவிட்டு மது அருந்துகின்றனர். பின்னர், காலி பாட்டில்களை மைதானத்திற்குள் வீசிச் செல்கின்றனர். இதனால், மறுநாள் விளையாட வரும் பள்ளி மாணவர்கள் மது பாட்டில்களை அப்புறப்படுத்திய பிறகே விளையாடும் சூழல் உள்ளது.
மது பாட்டில்களை உடைத்து போடப்படுவதால் இந்த மைதானத்தில் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோரின் கால்களை பதம் பார்க்கின்றன. ஆகவே, திருப்போரூர் அரசுப்பள்ளி மைதானத்தில் மது அருந்துவோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cricket teams ,Pokkine ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...